ஒலி, ஒளி அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு வலை

திருவண்ணாமலை, ஜூலை 4: சேத்துப்பட்டு அருகே கோயில் திருவிழாவில் ஒலி, ஒளி அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். சேத்துப்பட்டு அடுத்த கிழக்குமேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா கடந்த 26ம் தேதி நடந்தது. இதையொட்டி சவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் கிருஷ்ணமூர்த்தி(40) என்பவர் ஒலி, ஒளி அமைக்கும் வேலையில் இருந்தார். அப்போது, கிழக்கு மேடு கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் மகன் யுவராஜ் என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் வந்து எனக்கு பிடிக்காத பாடலை ஏன் போடுகிறாய் என கேட்டு தகராறு செய்தாராம். பின்னர், டிராக்டரை ஓட்டி வந்து ஆம்பிளிபயர் உட்பட மின்சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்தியை கீழே தள்ளி கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி நேற்று சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சாபுதீன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள யுவராஜை தேடி வருகிறார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை