ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்; கல்லூரி கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகைக்கு கல்லூரி மாணவர்கள் வரும் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம், ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் முழு நேர கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பகுதிநேர கல்லூரிகள் அல்லது பட்டயப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது. நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற, https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் அக்.31 ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 2022-23 கல்வியாண்டில்  புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டையில் உள்ளதுபோல் பதிவிட வேண்டும். பெயரில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து அக்.31 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்