ஒடுகத்தூரில் இருந்து மேலரசம்பட்டு வரை குறுகலான சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்-விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு : ஒடுகத்தூரில் இருந்து மேலரசம்பட்டு வரை இரண்டரை கி.மீ தூரத்திற்கு குறுகலான தார்சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு காப்புகாடுகள் உள்ளன. இதில் ஒடுகத்தூரில் இருந்து மேலரசம்பட்டு வரை செல்ல சாலை வசதியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறைக்கு சொந்தமான கருத்தமலை காப்புக்காடு இடத்தை ஒதுக்கி ஒடுகத்தூர்-மேலரசம்பட்டு வரை நெடுஞ்சாலை துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 12 அடி அகலத்தில் தார்சாலை போடப்பட்டது. இவ்வழியாக ஒடுகத்தூரில் இருந்து மேலரசம்பட்டு, கொட்டாவூர், வண்ணாந்தாங்கல், கத்தாரிகுப்பம், தீர்த்தம், அம்மனூர், உமையம்பட்டு மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். ஆரம்பத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்ததால் மக்கள் சிரமமின்றி சாலையில் சென்று வந்தனர்.தற்போது ஒடுகத்தூர்-மேலரசம்பட்டு சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள் அதிகளவில் செல்கிறது. பஸ்கள், லாரிகளுக்கு வழிவிட ஒதுங்கி செல்லும் போது பலர் விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த சாலையில் மட்டும் அதிகளவில் விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் லேசான காயங்கள் தவிர, படுகாயம், உயிரிழப்பு போன்ற விபத்து வழக்குகள் மட்டும் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த சாலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் அதிகளவில் இருப்பதால் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர்கள், நெல் அடிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்த சாலைவழியாக தான் செல்ல வேண்டும். குறுகலான சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் விவசாயத்திற்கு வேண்டிய வண்டிகள், உரங்களை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குறுகலாக உள்ள ஒடுகத்தூர்-மேலரசம்பட்டு தார்சாலையை விரிவுப்படுத்தி இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் வனத்துறை, நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட, தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டத்திலும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி தொகுதி எம்எல்ஏ நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே இனியாவது விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட வனத்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்