ஐப்பசி மாத பவுர்ணமி: கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்

தஞ்சை: உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழகம் மட்டும்மல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரியகோயில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம்  தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை(7ம் தேதி) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது.இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 38ம் ஆண்டு அன்னாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. 100 மூட்டை அரிசியால் சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். அவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அன்னாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 5 மணி அளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு பிரகன் நாயகி அம்பாளுக்கும், பிரகதீஸ்வரருக்கும் மகா அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாளை காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு அன்னம் சாற்றல், துவங்கப்பட்டு மாலையில் பலகாரங்கள் செய்து சாதத்தின் மேல் அடுக்கி மலர் அலங்காரம் செய்து 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள சாதத்தினை ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். 8ம் தேதி செவ்வாய்க்கிழமை கிரகணத்தை முன்னிட்டு காலை 10.30 மணிக்குள் உருத்திரா அபிஷேகம், சண்டிகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. …

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்