ஏரல் அருகே கொற்கையில் 9 அடுக்கு சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு

ஏரல் :    தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணியும் கடந்த பிப்.26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொற்கையில் 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வில் பாண்டியரின் தலைநகரமாக கொற்கை இருந்ததாகவும், துறைமுகம் இருந்ததாகவும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கொற்கை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் வீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அந்த இடத்தில் அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் கொற்கை ஊர் பகுதியில் முத்துக்குமார், சுடலைமுத்து, தண்டபாணி, கிருஷ்ணன், பெருமாள் பட்டர், மைனர் பிள்ளை, ஹரி வீரபாண்டியன் உட்பட தனிப்பட்டவர்களின் இடங்களில் 16 குழிகளும், மாரமங்கலத்தில் ஒரு குழியும் சேர்த்து 17 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் அகழாய்வாளர்கள் ஆசைதம்பி, காளீஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 5 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணியில் ஏற்கனவே சங்க இலக்கியத்தில் கூறப்படும் 2 ஆயிரம் ஆண்டுகள் மிக பழமையான 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமான அமைப்புகள் முத்துக்குமார் என்பவர் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  இதன் அருகே மற்றொரு குழியில் கண்டுபிடிக்கப்பட்ட 4 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்கள் தோண்ட, தோண்ட சென்று கொண்டே இருந்தது. தற்போது 9 அடுக்கு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் அகழாய்வில் இதேபோல் பெரிய அளவில் திரவப்பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்கள் வேறு எங்கும் கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இது கொற்கையின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இதன் அருகே அழகிய முழு சங்குகள் மற்றும் சங்கு அறுக்கப்பட்ட நிலையிலும் ஏராளமாக கிடைத்து வருகிறது. இப்பகுதியில் பழங்காலத்தில் கடல் பகுதி இருந்துள்ளதால் சங்கு அறுக்கும் தொழிற்கூடங்கள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதன் அருகில் ஒரு குறியீடு உள்ள பானை ஓடு மற்றும் சிறிய பானையும் கிடைத்துள்ளது. கண்ணாடி மணிகள், இரும்பு பொருட்கள், கடல் சிப்பிகள், கடல் உயிரினத்தின் எலும்புகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட புகைப்பான்கள், விலங்கு உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் சிறபங்கள் என தொடர்ந்து அரிய வகை பொருட்கள் தோண்ட, தோண்ட கிடைத்து வருவதால் அகழாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்