ஏரல் அருகே ஆலங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

ஏரல்,அக்.21: ஏரல் அருகே மழைக்காலத்தில் வாழை, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிவதை தவிர்த்திட இப்பகுதியில் உள்ள ஆலங்கால் வடிகால் வாய்க்காலை அரசு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகே மங்கல குறிச்சி, பெருங்குளம், மாங்கொட்டாபுரம், சிவகளை, காடுவெட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் நெல் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி விளை நிலங்களுக்கு குளத்து பாசனம் மற்றும் வை. வடகால் வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.இந்த உபரி தண்ணீர் மற்றும் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை வடிய வைப்பதற்காக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆலங்கால் வடிகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் ஆத்தாம்பழம் வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் வடிகிறது.

இந்த வடிகால் வாய்க்கால் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தின் போது பல இடங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்து வருகிறது.இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் இந்த வடிகால் வாய்க்காலில் வடியவைக்க முடியாத நிலையில் தண்ணீர் வயல்களில் புகுந்து அங்கு பயிர் செய்துள்ள வாழை, நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி விடும் என இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே அரசு இந்த ஆலங்கால் வடிகால் வாய்க்காலை விவசாயிகள் நலன் கருதி உடன் தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மங்கலகுறிச்சியில் வாழை விவசாயம் செய்து வரும் பண்டாரவிளை துரைசிங் கூறியதாவது;பெருங்குளம், மங்கலகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல லட்சம் வாழை விவசாயம் செய்துள்ளோம். மேலும் மழை பெய்ய தொடங்கியதும் விவசாய நிலங்களை உழுது நெல் நாற்றுகள் போட தயார் நிலையில் உள்ளோம். இப்பகுதிகளில் வயல்களில் தேங்கும் உபரி தண்ணீர் மற்றும் மழை காலத்தில் வயல்களில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை வடிய வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்ந்து போய் இருப்பதால் மழைக்காலத்தில் இவ்வழியாக தண்ணீர் வடிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நிலை ஏற்பட்ட போது வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து அவரது சொந்த பணத்தில் இருந்து இந்த வடிகால் வாய்க்காலை தூர்வாரி கொடுத்தார். தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் அதற்குள் அரசு இந்த ஆலங்கால் வாய்க்காலை விவசாயிகள் நலன் கருதி தூர்வாரி தர வேண்டும்’ என்றார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி