எவ்வித விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியது ஏன் : ஈபிஎஸ் – ஒபிஸுக்கு அதிமுக நிர்வாகி நோட்டீஸ்

சென்னை : கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்து அதிமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ரூபம் கே வேலவன் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில் அதிமுகவைவிட்டு நீக்கிய நடவடிக்கை தம்மை கட்டுப்படுத்தாது என்று அறிவித்துள்ளார். 1988ம் ஆண்டு முதல் அதிமுகவில் சேர்ந்து ஓயாத கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக ரூபம் கே. வேலவன் நோட்டீஸில் தெரிவித்துள்ளார். கட்சி பணியை அங்கீகரிக்கும் வகையில் 1995ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் அதிமுக மாணவர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.17 ஆண்டுகள் விளாத்திகுளம் ஒன்றியக் கழக செயலாளராக பதவி வகித்துள்ளதாக குறிப்பிட்ட வேலவன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஜூன் 27ம் தேதி அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாக அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தம்மை நீக்கி இருப்பதாக வெளியான அறிவிப்பை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.அதிமுகவின் திருத்தப்பட்ட துணை விதிகளின்படி தம்மிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீக்கி இருப்பது செல்லாதது என்றும் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பு எவ்வகையிலும் தன்னை கட்டுப்படுத்தாது என்றும் ரூபம் கே. வேலவன் குறிப்பிட்டுள்ளார்.அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதற்காக கட்சியில் இருந்து வேலவன் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை