எழும்பூர் காசா மேஜர் சாலையில் நள்ளிரவு பரபரப்பு தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில் கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்கள் சேதம்

* போதையில் விபத்து ஏற்படுத்திய வழக்கறிஞர் கைது * இளம்பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்* காரில் யானை தந்தங்கள், மான் கொம்பு சிக்கியதுசென்னை: எழும்பூரில் நள்ளிரவில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்கள் சேதமடைந்தன. போதையில் கார் ஓட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் காசா மேஜர் சாலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சொகுசு கார் ஒன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்றது. திடீரென இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிரில் சென்ற நானோ கார் மீது மோதி, அடுத்தடுத்து 2 ஆட்டோக்கள், 3 பைக்குகள் மீது பயங்கர வேகத்தில் மோதி நின்றது. இதை பார்த்ததும் வாகன ஓட்டிகள், நாலாபுறமும் சிதறி ஓடினர். நானோ காரில் சென்ற எழும்பூர் எத்திராஜ் சாலையை சேர்ந்த வில்சன், அவரது 2 மகள்கள் மற்றும் மகளின் தோழி படுகாயமடைந்தனர். ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரனும் (46) படுகாயமடைந்தார்.அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கிய 5 பேரையும் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சொகுசு காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அண்ணாநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (57) என்பதும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இவர், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். அதிகளவில் மது அருந்தி இருந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், ராதாகிருஷ்ணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.  அப்போது, அவர் அதிகளவில் மது அருந்தி இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் ராதாகிருஷ்ணன் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது, சாலை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய நானோ காரில் 6 யானை தந்தங்கள், மான் கொம்பு இருப்பது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். யானை தந்தங்கள் மற்றும் மான் கொம்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் நானோ காரின் உரிமையாளர் வில்சனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, யானை தந்தங்கள், மான் கொம்புகள் யாருக்காகவாவது கடத்தி வரப்பட்டதா அல்லது விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்