எம்எல்ஏ அடித்த கூத்தை பார்த்து தொண்டர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தவறுக்கு துணை போனால்…. யாராக இருந்தால் என்ன, சஸ்பெண்ட் என்ன, டிஸ்மிஸ் கூட ஆக வேண்டியதுதான்…’’ கடுமையாக விமர்சித்தார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவிலில் இஎஸ்ஐ மருந்தகத்தில் பணியாற்றிய பெண் மருத்துவர், 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். மேலும், இவருக்கான  இறப்பு-ஓய்வுப் பணிக்கொடை ரூ.20 லட்சத்தை எந்த ஆவணத்தையும் தராமல், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதமே பெற்று விட்டாராம். கொரோனா முதல் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இலை ஆட்சியில் அவருக்கு 3 மாதம் பணி கான்டிராக்ட் வழங்கப்பட்டது. கான்டிராக்ட் காலத்தில் பணிக்கே வரவில்லையாம். ஆனால், சம்பளம் மட்டும் வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், நாகர்கோவில் மருந்தக பொறுப்பு மருத்துவ அலுவலர் பெண் டாக்டரிடன் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம். இயக்குனரும் ரிஜக்ட் செய்துட்டாராம். இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி, நாகர்கோவில் மருந்தக பொறுப்புகளை பணியில் இளையவரான அரசு பணிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன, பணி வரண்முறை செய்யப்படாத,  தகுதிகாண் பருவம் முடிவடையாதவருக்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரின் நெருக்கடியை தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவருக்கு முறையாக பணிக்கு வராததாக கூறப்பட்ட நாட்களுக்கான சம்பள  பட்டியல் தயார் செய்யப்பட்டு கருவூலத்திற்கு அனுப்பியுள்ளார்கள். பணியில் மூத்தவரும், பணி மூப்பு அடிப்படையில் முதியவருமான முதுநிலை உதவி மருத்துவரின் பொறுப்பு இதற்காக பறிக்கப்பட்டுள்ளது இஎஸ்ஐ வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… தவறுக்கு துணை போனதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விஷயம் நாகர்கோவில் பரபரப்பாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தனி ஒருவனாக வசூலில் கலக்கும் வெயிலூர் காக்கிகள் பற்றி ஆந்திராவில் ஏன் பேசுறாங்க…’’ என்று வியப்புடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழக-ஆந்திரா பார்டர் பகுதியான காட்டுப்பாடு கிறிஸ்டியான் பேட்டையில, போலீஸ் செக்போஸ்டை இருக்குது. இந்த செக்போஸ்ட்ட கடந்துத்தான், ஆந்திராவுல இருந்து வர்ற வாகனங்களும், தமிழகத்துல இருந்து ஆந்திராவுக்கு போற வாகனங்களும்  போகணும். இதனால இந்த சாலையில 24 மணிநேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். 2 மாநிலங்களோட பார்டர் பகுதியாக இருக்குறதால, இங்க காட்டுப்பாடியைச் சேர்ந்த காக்கிங்க வாகன சோதனையில ஈடுபடுறாங்க.இந்த  செக்போஸ்ட்ட கடந்து போகணும்னா, எந்த டாக்குமென்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சம்திங் கொடுக்காம போகவே முடியாதாம். இதுல கொடுமையான விஷயம், பார்டர்ல இருக்குற ஒவ்வொரு காக்கிங்களும் தனி ஒருவனாக வண்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துறாங்களாம். இந்த வசூல் வேட்டையால டூரிஸ்ட் டிரைவருங்க புலம்பித்தீர்க்குறாங்க. இதனால, காட்டுப்பாடி காக்கிங்களோட, சம்திங்  மேட்டர் ஆந்திரா வரைக்கும் பேசப்படுதாம். இதனால, வெயிலூர் மாவட்ட உயர் காக்கி இதுல தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை  எழுந்திருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ எம்எல்ஏவின் அட்ராசிட்டி தாங்க முடியலைன்னு சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி ஒன்றை சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ, மாங்கனி மாவட்டத்துல இருக்கும் அந்த எம்எல்ஏவுக்கு பொருந்துதாம். எலெக்ஷன்ல நான் உங்கள் அடிமை.. உங்கள் கட்சி தொண்டனாக செயல்படுவேன்னு சொல்லி இலைக்கட்சியினரையே புல்லரிக்க வச்சாராம். நான் ஒரு ஆக்டிவ் எம்எல்ஏன்னு அடிக்கடி காட்டிக்கிட்டிருக்காராம். அவரது தொகுதிக்குள்ள இருக்கும் அரசு ஆபீஸ்களை எல்லாம் சூறாவளியாய் சுற்றி வரும்  அவர், வாக்கிங் டிரஸ்ல கல்வி அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைக்கிறாருன்னா பாருங்களேன். அவரது சூறாவளி பணியை பார்த்து அவரது கட்சிக்காரங்களே மலைச்சிபோய் இருக்காங்களாம். மந்திரி வந்தா ஓடி வருவதும், எதிர்க்கட்சி தலைவர் வந்தா அங்கே ஓடுவதுமா பம்பரபாக இருக்காராம்.அதுக்கு சாட்சியா  சம்பவம் ஒன்னு நடந்துருக்காம். அழகான பகுதியில ரூ.90 லட்சம் மதிப்புல சாலை போடும் பணி ஏற்கனவே நடந்துக்கிட்டிருக்கு. ஜல்லி போடப்பட்டு தார் ஊத்தும் நிலையில் அந்த பக்கமா போன எம்எல்ஏ திடீரென ஷாக்காயிட்டாராம். என்னது.. என் தொகுதிக்குள்ள புது சாலையானு கேள்வி எழுப்பிக்கிட்டே, நானும் பூஜை போடுவேன்னு சொல்லி அடம் பிடிச்சிருக்காரு. பின்ன அவரது ஆசையை பூஜை போட்டு நிறைவேற்றிக்கிட்டாராம். இதை பார்த்த அவரது கட்சிக்காரங்க மட்டுமல்ல…  கூட்டணி கட்சிக்காரங்களே சத்தமில்லாம சிரிச்சிருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா