என் பொண்ணையே தடுத்து நிறுத்துறியா… யூனிபார்மை கழட்டிருவேன்…போலீசாரை மிரட்டிய பெண்

*சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோசென்னை : கொரோனா தடுப்பு பணியில் போலீசார் 24 மணி நேரமும் ஓய்வின்றி மாநகர முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.அந்த வகையில், சேத்துப்பட்டு சிக்னல் அருகே நேற்று காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம் பெண் ஒருவர் காரில் வந்தார். அதை பார்த்த போலீசார் காரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்காமல் நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் போலீசாரை சட்டை செய்யாமல் அங்கிருந்து செல்ல முயன்றார். உடனே போலீசார் இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்தனர். அவரது காரை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது, அந்த இளம் பெண் தனது அம்மாவை போன் செய்து அழைத்துள்ளார். உடனே, சொகுசு காரில் விரைந்து வந்த இளம் பெண்ணின் தாய், மகளின் காரை வழிமறித்து கேள்வி கேட்ட போக்குவரத்து போலீசாரிடம் என்ன நடந்தது என்று தெரியாமல் ‘என் மகளையே தடுத்து நிறுத்துறியா….. நான் யார் தெரியுமா…. உன் யூனிபார்மை கழற்றிவிடுவேன், பேசாதே வாயை மூடு..’ என்று போலீசாரை ஒருமையில் பேசி நடுரோட்டில் ஆக்ரோஷமாக  தகராறில் ஈடுபட்டார். அப்போது போலீசார், ‘‘மேடம் நீங்கள் முதலில் முகக்கவசம் அணியுங்கள்’’ என்று கூறினர். ஆனால் இளம் பெண்ணின் தாய்.. போலீசாரின் பேச்சை கேட்காமல் நடுரோட்டில் காரை நிறுத்துவேன் என்று கூறி அடாவடி  செய்தார். மேலும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அவற்றை எல்லாம் அமைதியாக கேட்ட போலீசார்… கொரோனா விதிமுறைகளை கூற முயன்றபோதும் அதை காதில் கேட்டுக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஆக்ரோஷமாக நடத்தபடி கூச்சலிட்டார். ஒரு கட்டத்தில் போலீசாரை ஒருமையில் பேசிவிட்டு தனது மகளை காரை எடுக்க சொல்லி அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து உடனே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சேத்துப்பட்டு சிக்னல் அருகே சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் விசாரணை நடத்தினர். மேலும், போலீசாரை பணி செய்ய விடமாமல் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த இளம் பெண்ணின் தாய் குறித்து அவர்கள் வந்த சொகுசு காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி