எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம்: தமிழ் இசை சங்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல்  வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துக்  கொள்ளலாம். ஆனால் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக்  கொள்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80ம் ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ தாயகம் கவி, ஏ.சி.முத்தையா, இசைப்பேரறிஞர் துணை வேந்தர் சவுமியா, சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:    தமிழ் மொழியைக் காக்க, மறைமலையடிகள் தலைமையில், தனித்தமிழ் இயக்கம் எழுந்தது. தமிழ்க் கலையைக் காக்க, இந்த தமிழ் இசைச் சங்கம் எழுந்தது. தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும், தமிழிசை இயக்கமாக இருந்தாலும், அனைத்தையும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்துப் போற்றியது. தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ்ப் பாட்டைப் பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், மேடை தீட்டாகிவிடும் என்று நினைத்தார்கள். தமிழை நீசபாஷை என்று பழித்தார்கள்.  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொழில், நிதி நிர்வாகத்துக்காக உருவாக்கியது, இந்தியன் வங்கி, இசைக்காகத் தமிழிசை மன்றங்கள் இவை அனைத்தும் தகுதிநிறைந்த வாரிசுகளால், மிகச்சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை இங்கே நினைவுறுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தமிழிசைச் சங்கத்தின் 55வது ஆண்டு விழாவில், அதாவது  1998ம் ஆண்டு  கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 58வது ஆண்டு விழாவில் 2000ம் ஆண்டில் கலந்து கொண்டிருக்கிறேன் சென்னை மாநகரத்தினுடைய மேயராக. அப்போதும் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன். இன்று முதல்வராக வந்துள்ளேன். இது தமிழ் இசை மன்றம் என்பதால், தமிழிசையை அதிகம் வலியுறுத்தத் தேவையில்லை. சில நாட்களுக்கு முன்பு மியூசிக் அகாடமி ஹாலில் சொன்னதை இங்கே மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழி தான் ஒரு இனத்தினுடைய இரத்த ஓட்டம், மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.பிறமொழி மீதான வெறுப்பு அல்ல அது ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை அந்த வகையில் இதுபோன்ற தமிழிசை மன்றங்களின் பணி மிக மிக மிக மகத்தானதாக அமைந்திருக்கிறது. ஒரு மன்றம் அல்ல, இது போல பல மன்றங்கள் தோன்ற வேண்டும். இசை மன்றங்கள், கலை மன்றங்கள், தமிழ் மன்றங்கள் உருவாக வேண்டும். அதற்கு ஏ.சி.முத்தையா தலைமையிலான தமிழிசை மன்றம் வழிகாட்ட வேண்டும். மியூசிக் அகடாமி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறைவாக பேசுகிறபோது சொன்னேன், முதலமைச்சராக பொறுப்பேற்று எவ்வளவு பணிகள் செய்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். அதை நினைவுபடுத்த அவசியமில்லை. கொரோனாவை சந்தித்தோம், புயலை சந்தித்தோம், மழையை சந்தித்தோம், வெள்ளத்தை சந்தித்தோம், இப்படி பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆக ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் ஒரே டென்ஷனாக இருக்கக்கூடிய நேரத்தில் ஒரு மன அமைதி, ஒரு மன நிம்மதி இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெறுகிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை