ஊட்டி பவாணீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன திருத்தேர் விழா: வரும் 27ம் தேதி நடக்கிறது

 

ஊட்டி, டிச.25: ஊட்டியில் பெர்ன்ஹில் பவாணீஸ்வரர் கோயிலில் 112ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி திருத்தேர் விழா நடைபெற உள்ளது. ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் ஸ்ரீபவாணீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1910ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தாண்டு 112வது ஆருத்ரா தரிசன மாகோற்சவ விழா நாளை 26ம் தேதி துவங்குகிறது.

அன்று காலை 9.30 மணிக்கு கணபதி, சூரிய பகவான் பூஜை, மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம், மாலை 4.30 மணிக்கு பூர்ணஹூதி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் மற்றும் மங்கள இசை உள்ளிட்டவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் நிகழ்ச்சி 27ம் தேதி நடக்கிறது. காலை 6 மணியளவில் பவாணீஸ்வரர் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

தேருக்கு முன்பு நீலகிரி வாழ் பாரம்பரிய பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்துடன் ஊட்டி மத்திய பஸ் நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மீண்டும் கோயிலில் நிறைவடையும். விழா ஏற்பாடுகளை பவாணீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர் காந்தராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை