ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் அலங்காரம்

 

ஊட்டி, செப்.10: ஊட்டியில் 2வது சீசன் துவங்கியுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் 20ம் தேதிக்கு மேல் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. நீலகிரியில் ஆண்டுதோறும் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய இரு மாதங்கள் முதல் சீசனாகவும், செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை 2வது சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

2ம் சீசன் துவங்கியுள்ள நிலையில் அனைத்து ஓட்டல், காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 2வது சீசனுக்காக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா போன்ற பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் பூத்துள்ளன. இதேபோல், தொட்டிகளிலும் ஒரு சில மலர்கள் மட்டுமே பூத்துள்ளன.

கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என காலநிலை மாறுபட்டு காணப்பட்டதால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் 90 சதவீத செடிகளில் தற்போது மொட்டுக்களே காணப்படுகின்றன. எனவே, அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்த பின்னர் அலங்காரங்கள் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஓரிரு நாட்களில் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் ஓரளவு மலர்கள் பூத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20ம் தேதிக்கு மேல் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை காண வாய்ப்புள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்