உ.பி.யில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: காங். எம்.பி. ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றவாளிகளை விடுவிப்பவர்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று தலித் சமூகத்தை சேர்ந்த சிறார்களான 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பெண்களின் தாயார் மாயா தேவி, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்தி சென்றுள்ளனர் என்றும், அவர்கள் தான் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தகவல் கிடைத்ததும் லக்கிம்பூர் கேரி மாவட்ட எஸ்பி சஞ்சீவ் சுமன், கூடுதல் எஸ்பி அருண்குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. யோகி அரசில், குண்டர்கள் தாய்மார்களையும், சகோதரிகளையும் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தை அரசு விரைவில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், லக்கிம்பூர் கேரி சிறுமிகள் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். …

Related posts

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார் கங்கனா

பில்லியனர் எல்லாம் அந்த காலம் உலகின் முதல் டிரில்லியனர் 2027ல் எலான் மஸ்க் ஆவார்: 2028ல் அதானி, 2033ல் அம்பானி