உள்குத்தால் மனம் நோகும் ராஜன் செல்லப்பா: அதிமுக எதிர்கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு

மதுரை மாவட்டத்தில் பத்தில் ஏழு தொகுதிகளை அதிமுக வென்றாலும், செல்லூர் ராஜூ, உதயகுமார் என 2 அமைச்சர்கள் இருந்தாலும், பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த திட்டங்களையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. இதனால், ‘‘சீட்டு கிழிந்து விடும்’’ என்ற அச்சத்தில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தொகுதி மாறி போட்டியிடும் எண்ணத்தில் உள்ளனர். மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான இவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட தேறாதாம். அந்தளவுக்கு மக்கள் செம காண்டுல இருக்காங்களாம். இதனால் வேறு தொகுதியை தேடிக்கொண்டிருக்கிறார். பேசாம திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவோம் என காய் நகர்த்தியவருக்கு, முட்டுக்கட்டையாக நிற்கிறார் முனியாண்டி. இவர் கடந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். நானும் களத்துல இருக்கேம்பா என்றபடி மீசையை முறுக்கி நிற்கிறார் அதிமுக மாஜி எம்எல்ஏ ‘‘மீசை’’ முத்துராமலிங்கம். இவர் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர். இவங்க 3 பேரும் திருப்பரங்குன்றம் கேட்டு அதிமுக தலைமையிடம் விருப்ப மனு தந்துள்ளனர். ராஜன்செல்லப்பாவை பொறுத்தவரை டிடிவி அணிக்குஎம்எல்ஏக்கள் மாறிய நேரத்தில், அங்கே செல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர். காலை, மாலை, இரவு சந்திப்பார் என இவரே செய்தியை உருவாக்கி, பில்டப் பண்ணி தலைமைக்கு டென்ஷன் கொடுத்தார். கடைசியில் எடப்பாடி சமாதானம் செய்து, தன் ஆதரவாளராக மாற்றிக் கொண்டார். அதன் விளைவாகத்தான் கடந்த எம்பி தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. திருப்பரங்குன்றம் தொகுதியை தராவிட்டால், வேறு முடிவை எடுப்பேன் என ராஜன் செல்லப்பா தலைமையை எச்சரித்துள்ளாராம். எடப்பாடி ஆசி இருப்பதால் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதாம். இதையறிந்த ‘‘மீசை’’ முத்துராமலிங்கம், ‘உங்களது விசுவாசியாக இருப்பதால் எனக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட் கிடைப்பது கஷ்டம்’ என ஓபிஎஸ்சிடம் கூறி புலம்பியிருக்கிறார். ‘‘கவலைப்படாத. உனக்கு அங்க சீட் கொடுக்காவிட்டால், நாம் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்’’ என ஓபிஎஸ் ஆறுதல் கூறியதாக தெரிகிறது. ஒருவேளை ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை வீழ்த்த வேண்டும் என ‘‘மீசை’’ முத்துராமலிங்கம் மற்றும் முனியாண்டி ஆகியோர் சபதம் எடுத்துள்ளதாகவும், அதற்கான உள்ளடி வேலைகளிலும் அவர்கள் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த எடப்பாடி, ‘‘பேசாம, தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி விடலாமா’’ என்று யோசிக்கிறாராம். இதை தனது ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட ராஜன்செல்லப்பா, உடனே சென்னையில் முகாமிட்டு திருப்பரங்குன்றத்தை கேட்டு எடப்பாடிக்கு ஓவர் அழுத்தம் தருகிறாராம். ‘‘சீட் உறுதியானால்தான் மதுரைக்கு திரும்புவேன்’’ என கடந்த சில நாட்களாக சென்னையிலே தவமிருக்கிறாராம்… ‘‘எங்க தொகுதிக்கு வேண்டாம்.. பேசாம செல்லப்பா…’’ என எதிர்கோஷ்டியினரும் பேசித்திரிகின்றனராம்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…