உள்கட்சி தேர்தல் வரை இலை உதிராமல் தடுக்க மாஜி மந்திரி செய்யும் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மன்னர் மாவட்டத்தில் இலை கட்சி உதிராமல் தடுக்க மாஜி மந்திரி விஜயமானவர் என்ன செய்கிறாராம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகம் முழுவதும் இலை கட்சியின் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. மன்னர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதால் கட்சியினர் மத்தியில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதாம். பழைய பதவியை இழக்கக் கூடாது என்று ஒரு குரூப்பும்… பழைய ஆட்களால்தான் இலைக்கு தோல்வி, அவர்களை மீண்டும் பணிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பும் வேலை செய்துட்டு வருதாம். இதுல, மன்னர் மாவட்டத்தில் பதவியை பிடிக்க இலை கட்சியின் டவுன் செகரட்டிரிக்கும்.. நகர மன்ற தலைவர் ‘கிங்கானவருக்கும்’ இடையே பனிப்போர் நடக்குதாம். இலை கட்சியின் தோல்விக்கு இவர் தான் காரணம் என்று ஒரு ததரப்பும்… இல்லை அவர் தான் காரணம் என்று மற்றொரு தரப்பும் மாறி மாறி வடக்கு மாவட்ட தலைமைக்கு இரு தரப்பினரும் புகார் அனுப்பி வருகிறார்களாம். மன்னர் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சரை ‘‘ஐஸ்’’ வைக்கும் பணியில் இருதரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம். இவங்களுக்கு உள்ள போட்டியில் கட்சியே கலகலத்து போய்விடும்போல என்று மாஜி மந்திரி நினைக்கிறாராம். உட்கட்சி தேர்தல் வரை அவர்களை சமாளிக்க ஒருவருக்கு ஒரு பதவி.. கவுன்சிலராக இருந்தாலும், சீட் பெற்று இருந்தாலும் கட்சியில் பதவி இல்லை என்று கூறி தற்போதைக்கு தப்பிவிடலாம் என்ற யோசித்து காய்களை நகர்த்தி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒரே இடத்தில் 20 வருடமாக பணியில் இருப்பதால்… எந்த திட்டத்தை கொண்டு சென்றாலும் மனுவை குப்பையில் எந்த அதிகாரி போடுகிறார்னு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இந்து சமய அறநிலையத்துறையில் வருவாய் இல்லாத ஏழ்மை நிலையில் உள்ள கோயில்களில் ஆணையர் நிதியில் திருப்பணி மேற்கொள்ளும் ஒரு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில்தான் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள ஒருவரின் அலம்பலால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். அந்த கண்காணிப்பாளர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அதே இடத்தில் பணியில் இருந்து வருகிறாராம். கடந்த அதிமுக ஆட்சியின்போதே என்னை எதுவும் செய்ய முடியாது என்று ஆட்டம் போட்டு வந்த இவருக்கு இப்போதாவது முட்டுக்கட்டை போட வேண்டும் என்றும், அவரால் முடங்கி போயுள்ள ஆணையர் நிதியில் திருப்பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட கோயில்களில் பணிகளை தொடங்கவும், பணிகள் தாமதமாகும் நிலையில் கோயில்களில் பணிகளை விரைவுப்படுத்தவும் வேண்டும் என்று எல்லா உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் கேட்டு வருகிறார்களாம். இதற்காக பக்தர்கள், நன்கொடையாளர்கள், கீழ்நிலை அதிகாரிகள் கொடுக்கும் மனுக்களை குப்பை தொட்டியில் போட்டுவிடுகிறாராம். அதனால் தனக்கு பயன் இருந்தால் மட்டுமே அதை தூசு தட்டி எடுத்து அனுமதி கொடுக்கிறாராம்… இதனால வெயிலூர், திருவை தொடக்கமாக கொண்ட மாவட்டமும், குயின்பேட்டை, தீபமலை மாவட்டத்தில் உள்ள செயல்அலுவலர்கள் இதுதொடர்பாக ஆணையரிடமும், உள்ளூர் அமைச்சர்களிடம் புகார் தெரிவிக்கவும் தயாராகி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘டிரான்ஸ்பர் போட்டாலும் மலைபோல அதை சந்தித்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்த இலை ஆதரவு அதிகாரியை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தாம்பரம் மாநகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும், அன்பானவர், இதற்கு முன்பு  மறைமலைநகர் நகராட்சியில் பணியாற்றி வந்தார். இவர் இலை கட்சி உறுப்பினராக  உள்ளாராம். மேலும் இவர் மீது ஏராளமான புகார் வந்ததையடுத்து தாம்பரம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். தற்போது அதிகாரிகளை பிடித்து மீண்டும் மறைமலைநகர் நகராட்சிக்கு மீண்டும் பணிமாற்றம் பெற்றுள்ளார். மறைமலைநகரின் முன்னாள் அதிமுக தலைவரும், செங்கை மண்டல நகராட்சியின் செயற்பொறியாளர் ஒருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். இவர்கள் மூலமாகவே மீண்டும் மறைமலைநகர் நகராட்சிக்கு பணிமாற்றம் வாங்கியுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தில் அப்படி என்ன அதிரடி நடந்தது…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துவந்த நீர்நிலை புறம்போக்குகள் அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடவே தனியார் எஸ்டேட் முதலாளிகள் பல ஆண்டுகளாக ஆக்ரமித்து வைத்திருந்த ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் இப்போது அதிகாரிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசு திட்டங்களுக்கு இடம் இல்லை என்ற பிரச்னைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பெருமுதலாளி கைவசம் ஒருவர் வைத்திருந்த 4 சர்வே எண்களில் இருந்த 93 ஏக்கர் நிலம் வருவாய்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் ஆக்ரமிப்பாளர்கள் மிரண்டுபோயுள்ளனர். அடுத்து எங்கே அளவீடு பணிகள் நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.    …

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா