உப்பூர் பகுதியில் நோய் பாதிப்புடன் திரியும் நாய்கள்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.19: உப்பூரில் வீதிகளில் சுற்றி திரியும் நோய் தொற்று நிறைந்த நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உப்பூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் ஆலயம் உள்ளது. ஆகையால் இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்கு விநாயகரை வழிபட வந்து செல்கின்றனர்.

அதேபோல் உப்பூரை சுற்றியுள்ள மோர்ப்பண்ணை, கடலூர், உகந்தான்குடி, சித்தூர்வாடி, நாகனேந்தல் உள்ளிட்ட சுற்றுபுற கிராம மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை சாமான்கள், காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கும் இங்கு தான் வருகின்றனர். அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லக் கூடிய பெரும்பாலான தொலை தூர பேருந்துகளும் இங்கு தான் சாப்பாட்டிற்காக நிறுத்துகின்றனர். அதனால் அந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும் உப்பூரில் இறங்கி சாப்பிடும் வழக்கம் உள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்ஊரில் ஏராளமான நாய்கள் நோய் தொற்றுடன் முடிகள் உதிர்ந்து சொரி நாய்களாக உலா வருகின்றது. இவ்வாறு நோய் தாக்குதலுடன் உலா வரும் நாய்களை பார்த்து பொதுமக்களும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் ஒருவித அச்சத்துடன் தெறித்து ஓடுகின்றனர். மேலும் இந்த நாய்களால் பொதுமக்களுக்கு ரேபீஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் உள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை