உபி.யிலும் 55 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு கோவா, உத்தரகாண்டில் நாளை தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது; பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி:  உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு 2ம் கட்ட தேர்தலும், உத்தரகாண்ட் , கோவா மாநிலங்களில்  ஒரே கட்டமாகவும் நாளை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 403 தொகுதிகளை கொண்ட உபி சட்டப்பேரவைக்கு மட்டும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 10ம் தேதி இம்மாநிலத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் பதிவானது. இது, கடந்த 2017 தேர்தலில் பதிவானவதை விட 3.7 சதவீதம் குறைவானது.இந்நிலையில், இம்மாநிலத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு நாளை 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இதில், 584 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். பாஜ, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜ – சமாஜ்வாடி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதேபோல், 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்திலும், 40 தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்திலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம், 3 மாநிலங்களிலும் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. கடைசி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.உத்தரகாண்டிலும், கோவாவிலும் தற்போது பாஜ ஆட்சி நடக்கிறது. உத்தரகாண்ட் தேர்தலில் இம்முறை காங்கிரஸ் – பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளில் எது வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. இவற்றுக்கு ஆம் ஆத்மி போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 3 மாநிலங்களிலும் பாதுகாப்புக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அடுத்த மாதம் 10ம் தேதி எண்ணப்பட உள்ளது.ராவத்தால் பாதிப்பா? * உத்தரகாண்டில் பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக புவன் சந்திர கப்ரியும், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக கொதியாலும் போட்டியிடுகின்றனர். * இம்மாநிலத்தின் செல்வாக்குமிக்க தலைவரான ஹரிஸ் ராவத்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வாய்ப்பு புவன் சந்திராவுக்கு வழங்கப்பட்டதால், ராவத் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.  மேலும், முதலில் ராம்பூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், பின்னர் அவரின் விருப்பத்துக்கு மாறாக லால்குவா தொகுதிக்கு மாற்றப்பட்டார். இவருடைய அதிருப்தி, காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது….

Related posts

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே

இஸ்ரோவில் 100 பணியிடங்களை நிரப்ப திட்டம்