உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த உதவியும் கிடைக்கவில்லை கொரோனாவால் கைவிடப்பட்ட பாலியல் தொழிலாளர்கள்: வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் தவிப்பு; மருத்துவம் கூட பார்க்க முடியாமல் சொந்த ஊருக்கு பயணம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித கொரோனா உதவியும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் தவித்த நிலையில் உள்ளனர். இந்தியாவின் கொரோனா நோய் தொற்று முதல் அலையாக கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. இதையடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் முடங்கியது. கொரோனா வைரசின் 2வது அலை தற்போது மீண்டும் நாடு முழுவதும் தொடங்கி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலையும் நின்றுவிட்டது.  இதில் முடக்கம் அறிவிக்கும் முன்னரே அவர்களாகவே தாமாக முன்வந்து தொழிலை நிறுத்தியதோடு, வாடிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை பாலியல் தொழிலாளர்களின் வருமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தலைநகர் டெல்லியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் பற்றி நாம் மிகவும் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் தற்போது அரங்கேறியுள்ளது. இதில் டெல்லியை பொருத்தவரையில், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாலியல் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இங்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி ஜி.பி சாலைப் பகுதியில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் ஓட்டுரிமைக்கூட அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகக் கூட கருதலாம். இதில் குறிப்பாக டெல்லியில் மொத்தமுள்ள 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களில் சுமார் 3ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றுக் காரணத்தினால் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததே முக்கிய காரணமாக கருதப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட பாலியல் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில்,”கொரோனோவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அவர்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில்,”கொரோனா காலத்தில் பாலியல் தொழில் செய்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் இவர்கள் சமுதாயத்தின் மிகச்சிறிய அங்கமாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு ரேஷன் அட்டை இல்லை என்றாலும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும். அதைப்போன்று அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும். இது அவசர நிலையாக கருத வேண்டிய ஒன்றாகும். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக கொரோனா காலத்தில் திருநங்கைகளுக்கு உதவுதற்காக எடுக்கப்பட்ட மாதிரியான நடவடிக்கைகளை பாலியல் தொழிலாளர்களுக்கும் அதுபோன்று நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்த அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தது. இதில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் மட்டும் தான் இந்த விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதேப்போன்று பாலியல் தொழிலாளர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவர்களுக்கு தேவையான எந்தவித உதவியும் மத்திய மாநில அரசுகள் தரப்பில் வழங்கப்பட்டவில்லை. மேலும் அவர்களது தொழிலும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி தான் உள்ளது.* மத்திய, மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்டெல்லி ஜி.பி சாலையில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் நம்மிடையே கூறியதில்,” இங்கே பாலியல் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் 60 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் தங்களது குடும்ப அனுமதியுடன் தான் பாலியல் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுப்பட்டு வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக இதில் நாங்கள் ஈடுபட்டு வருவதால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. அப்படியே சென்றாலும் பொதுமக்கள் எங்களை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது தான் முக்கியமாக உள்ளது. இதில் குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் நிறுத்தப்பட்ட எங்களது பாலியல் தொழில் தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது. இதில் சட்டத்திற்கு புறம்பாக வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு நாங்களே தாமாக முன்வந்து அதனை செய்ய மறுத்து விட்டோம். இதில் முக்கியமாக எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த பிறகும் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் இன்று வரை மேற்கொள்ளவில்லை என்பது வேதனையாக உள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு துறைகளுக்கு வங்கிளின் மூலம் உதவிகள் செய்வது போன்று எங்களுக்கும் செய்ய முன்வரலாம். ஆனால் அரசுகள் அதனை செய்ய தவறி விட்டது. அதுதோன்று நடக்கும் பட்சத்தில் இந்த வறுமையான சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது. இதில் முக்கியமாக தற்போது கொரோனா நோய் தொற்றின் 2வது அலையும் மீண்டும் வீசத் தொடங்கி விட்டது. அதனால் பாலியல் தொழிலை மீண்டும் நாங்கள் தொடங்குவது என்பது சாத்தியமே இல்லை. இதுபோன்ற இக்கட்டனான சூழலை கருத்தில் கொண்டு எங்களுக்கான உதவியை செய்ய அரசு முன்வர வேண்டும். இதில் டெல்லி மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் அனைவரின் நிலையும் இதேப்போன்று தான் உள்ளது. மேலும் எங்களது பிள்ளைகளும் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் ஆகியவற்றில் படித்து வருகிறனர். இதில் எங்களது தொழில் முடங்கியதால் அவர்களது கல்வி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு வேதனையுடன் கூறினர்….

Related posts

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!!