உக்ரைனில் இருந்து 21 மாணவர்கள் சென்னை வந்தனர் போர் சூழலில் இருந்து வந்த எங்களுக்கு அரசின் வரவேற்பு நெகிழ்ச்சி தருகிறது: மாணவர்கள் கண்ணீர் பேட்டி

சென்னை: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 21 மாணவ, மாணவிகள் நேற்று அதிகாலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அப்போது, எங்களுடைய படிப்பை விட்டுவிட்டு வர விருப்பமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறுவழியின்றி வந்திருக்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உக்ரையினிலிருந்து மீட்கப்பட்ட 250 இந்தியர்களுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தது. அதில் 21 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவ, மாணவிகள். (சென்னை 10, கோவை 4, திருப்பூர் 2, திருநெல்வேலி 1, தூத்துக்குடி 1, கன்னியாகுமரி 1, கடலூர் 1, திருப்பத்தூர் 1 இந்த மாணவ, மாணவிகள் 21 பேரும் நேற்று முன்தினம் இரவு 11.05 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லியிலிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களில் 15 பேர் மாணவிகள், 6 பேர் மாணவர்கள். தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து, அவரவர் வீடுகளுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கபட்டனர். நாடு திரும்பிய மாணவ, மாணவிகளை அவரவர் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கட்டித்தழுவி வரவேற்றனர்.  இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாணவ, மாணவிகள் கூறியதாவது: போர் சூழ்நிலை எங்களுக்கு பெரும் மனவேதனை அளிக்கிறது. எங்களுக்கு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இங்கு வர மனமும் இல்லை. விருப்பமும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு வழியில்லாமல் வரவேண்டியதாகி விட்டது. எங்களை பத்திரமாக மீட்பதில் ஒன்றிய அரசும், மாநில அரசும் மிகுந்த அக்கறை காட்டியது. நாங்கள் டெல்லியில் வந்திறங்கிய பின்பு, தமிழ்நாடு அரசு எங்களை சென்னைக்கு அழைத்துவந்து, சென்னை விமான நிலையத்தில் எங்களுக்கு இவ்வளவு சிறப்பான வரவேற்பை அளித்தது, எங்கள் உள்ளங்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. எனவே இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஈஸ்டன் சைடில் உள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுடைய சக மாணவ, மாணவிகள் படுகின்ற கஷ்டங்களை, வேதனைகளை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.   இவ்வாறு கண்ணீர்மல்க கூறினர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்