ஈரோட்டில் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

ஈரோடு, செப்.8: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து, ஈரோடு, காவேரி வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலைமைச்சரின் காலை உணவுத்திட்டம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,079 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 51,751 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில், ஈரோடு காவேரி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவையும் அவர் சாப்பிட்டார். மேலும், காலை உணவுத்திட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள ‘மொபைல் ஆப்’ செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, அவர், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட, பெரும்பள்ளம் ஓடையில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.200 கோடி மதிப்பில், 12.5 கிமீ நீளத்துக்கு சீரமைக்கப்பட்டு (பகுதி – 1, திண்டல்) வரும் பணி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர பொறியாளர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை