இஸ்லாம் மதத்துக்கு மாறும் பிற சமூகத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சாதிச்சான்று தமிழ்நாடு அரசு உத்தரவு

 

வேலூர், மார்ச் 11: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இஸ்லாமியராக மதம் மாறும் பிற சமூகங்களை சேர்ந்த மக்களுக்கும் வழங்கும் வகையில் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்று சாதிச்சான்று வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் அல்லது பட்டியல் பிரிவினரில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லிமாக கருத வேண்டும். அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்று சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன்மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் அவர்கள் தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதை ஏற்று இஸ்லாமுக்கு மதம் மாறிய மேற்கண்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்று சாதிச்சான்று வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இஸ்லாமியர்களில் அன்சர், டெக்கானி முஸ்லிம்கள், துடேகுலா, ராவுத்தர், மரைக்காயர் உட்பட லப்பைஸ், மாப்ளா, ஷேக், சையத் ஆகிய பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்று சாதிச்சான்று வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை