இலை கட்சி அதிருப்தியாளர்கள் நடத்திய ரகசிய ஆலோசனை கூட்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பொங்கல் பரிசு டோக்கன் விவகாரம் எப்படியிருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியினர் இந்த டோக்கன்களை வழங்குவதாக பிரச்னை எழுந்துள்ளது. தற்போது மற்றொரு பிரச்னை தலைதூக்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் இப்பணியை மேற்பார்வையிடுவதற்காக. ‘ஒரு வளர்ச்சித்துறை’ அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இத்துறையினரை பெரும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கி இருக்கிறதாம். தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிகிற இத்துறையின் ‘துணை அலுவலர்கள்’ இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இத்துறையில் பணியாற்றுபவர்கள், பல்வேறு பணிகளால் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கூடுதலாக ரேஷன் கடைகளுக்கு அனுப்புகின்றனரே? வருவாய்த்துறை மேற்கொள்ள வேண்டிய பணியை தங்கள் துறையினர் மீது திணிப்பதா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும்,  இப்பணிகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு கூறி, இத்துறையினர் ஓரிரு நாட்களில் போராட்டத்தில் குதிக்கவும் முடிவெடுத்திருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘குமரி மாவட்டத்தில் இலை கட்சி அதிருப்தியாளர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினாங்களாமே..’’  ‘‘ஆமா..ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் போய் சேரலாம் என்று எண்ணி இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வராததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி இலையின் அதிருப்தியாளர்கள் இந்த ரகசிய கூட்டத்தில் விவாதித்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் தலைமையில் தான் இந்த ரகசிய ஆலோசனை நடந்திருக்கிறது. நம்மை புறந்தள்ளுகிறவர்கள், எப்படியும் தேர்தல் வந்தால் நம்மிடம் பேச வருவார்கள். அப்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்களாம். கட்சி தலைமையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கட்சி நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து வேலை செய்ய வேண்டும் என இவர்கள் முக்கிய தீர்மானமும் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தியது தொடர்பாக உளவுத்துறையும் விசாரணையில் இறங்கி இருப்பதாக தகவல்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது ஏகப்பட்ட புகார் வந்ததே.. அது என்னாச்சு…’’  ‘‘புகார்கள் குவிந்தும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்காம இருந்து வந்தாங்க. இவங்க கோவையில் பணியில் சேர்ந்தது முதலே வசூல் வேட்டை நடத்தினாங்க. இதையெல்லாம், பள்ளிக்கல்வித்துறை கண்டுக்காமல் இருந்தது. கடைசியா லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிச்சுட்டாங்க. இந்த முதன்மை கல்வி அலுவலர் மேலே என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க போறீங்கனு, பள்ளிக்கல்வி இயக்குனர் கிட்ட கேட்டா அதுக்கு அவரு சி.இ.ஓ. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டவர். அதனால, அவர் மேல எங்களால நேரடியா நடவடிக்கை எடுக்க முடியாதுனு சொல்லி இருக்காரு. இதை கேட்ட, ஆசிரியர்கள், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மட்டும்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டாரா? நாங்க எல்லாம் ஆகாயத்தில் இருந்தா குதிச்சு வந்து இருக்கோம் என கேள்வி கேட்டுட்டு வராங்க. தப்பு செஞ்சு மாட்டின சி.இ.ஓ. மேல் நடவடிக்கை எடுக்க ஏன் பள்ளிக்கல்வித்துறை காத்திருக்குனு ஆசிரியர்கள் கேள்வியை எழுப்பி வராங்க’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘காவல்துறை சேதி இருக்கா…’’ ‘‘வேலியே பயிரை மேய்ந்தால்..  இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ நெல்லை மாவட்ட போலீசாருக்கு  ஏக பொருத்தம். போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு தொடர்பாக வரும் பைக்குகளை பாதுகாக்க  வேண்டிய போலீசாரே பாரா டூட்டியில் இருக்கிறோம், நம்மை யார் கேள்வி கேட்க  முடியும் என்ற எண்ணத்தில் அந்த பைக்குகளை திருடி விற்று விட்டால் என்ன  செய்வது?. அப்படித்தான் சிக்கியிருக்கிறார் பெண் காவலர் ஒருவர். போலீஸ்  பணிக்கு தரும் ஊதியம் போதவில்லை என்ற கணக்கில் புரோட்டோ மாஸ்டரான தனது  கணவருடன் நள்ளிரவில் பைக்கை லவட்டிக் கொண்டு சென்று பாதி விலைக்கு  விற்றுள்ளார். இந்த குட்டு வெளிப்பட எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த  பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இதற்கு  மறுநாளே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஒரு காவலர் பைக் திருட்டு  வழக்கில் சிக்கியிருக்கிறார். பாலியல் வழக்கில் சஸ்பெண்டில் இருக்கும் இவர்  செலவுக்கு பணமில்லை என பைக்கை திருடிச் சென்றாராம். இப்படி அடுத்தடுத்து  காவலர்கள் திருட்டு வழக்கில் சிக்குவது போலீஸ் இமேஜை கடுமையாக  பாதித்துள்ளதாம். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட  வழக்குகளில் பைக்குகள் வேறு எங்கும் காணாமல் போய் இருக்கிறதா என சரிபார்க்க  மணியான எஸ்பி உத்தரவிட்டுள்ளாராம். இதனால் காவலர்கள் கலக்கத்தில்  உள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மலராத கட்சி ஒருங்கிணைப்பாளர் நொந்து போய் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா