இறுதிக்கட்டத்தில் சீரமைப்பு பணிகள்!: சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது ‘தமிழ் வாழ்க தமிழ் வளர்க’ பெயர் பலகை மீண்டும் வைப்பு..!!

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேல் தளத்தில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. சமூக வலைத்தளங்களில் அது பேசு பொருளாகவும் மாறியது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தார்கள். இந்த நிலையில்  ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணி இறுதி கட்டத்தில் இருப்பதால் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. 
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாள் அன்று அந்த பெயர் பலகை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அண்மையில் சென்னையில் பெரியார் சாலை என்ற பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் சாலை என பெயர் மாற்றம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஈ.வெ.ரா. பெரியார் சாலை என பெயர் பலகை வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை