இரண்டு முறை பாதிக்கப்பட்டும் மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்த 86 வயது மூதாட்டி: காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

சென்னை: இரண்டு முறை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 86 வயது மூதாட்டிக்கு காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளது.இதுகுறித்து, சென்னை காவேரி மருத்துவமனையின் மார்பகம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் கீர்த்தி கேத்தரின் கபீர் கூறியதாவது:86 வயதான பெண்மணிக்கு 50 வயதுகளின் பிற்பகுதியில் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  அந்நேரத்தில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சையும், அதைதொடர்ந்து அவரது இடது மார்பகத்தை அகற்றுவதற்காக மாஸ்டெக்டமி என்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  அதன்பிறகு சிறிது காலத்திற்கு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய மருந்துகள் அவருக்கு தரப்பட்டன.  அவருக்கு அகற்றப்பட்ட அதே இடது மார்பக பகுதியில் சில நிணநீர் முடிச்சுகள் இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்று கூறி எங்கள் குழுவை சமீபத்தில் அந்த பெண்மணி அணுகினார்.  அவருக்கு செய்யப்பட்ட அல்ட்ராசவுண்ட் சோதனையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட அதே இடது மார்பக சுவர் மீது 5-6 நிணநீர் முடிச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  பல்வேறு துறைகளை சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை குழுவில் நடத்தப்பட்ட முழுமையான கலந்துரையாடலுக்குப் பிறகு, அவருக்கு கீமோதெரபி சிகிச்சை வேண்டியதில்லை என்று முடிவு செய்தோம்.  புற்று நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தது நோயின் குறைவான நிலை அம்சங்கள் மற்றும் அவரது வயது ஆகியவை முடிவை எடுப்பதற்கு வழிவகுத்தன.  புற்றுநோயின் குறிப்பிட்ட வகைகளின் வளர்ச்சி மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய உடலின் சில ஹார்மோன்களை தடுக்கின்ற புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் மூதாட்டிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டன.இதன்பிறகு  பாதிப்பு அறிகுறிகளிலிருந்து நோயாளி விடுபட்டார்.  மருந்துகளுக்கும் கூடுதலாக, மார்பக பகுதிக்கு கதிரியக்க சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஒரு வயது முதிர்ந்த பெண்மணியால் அவரது உடலில் சில நுட்பமான இயல்பு பிறழ்வுகள் இருப்பதை கண்டறிய முடிந்திருக்கிறது.  ஒருமுறையல்ல, இரண்டு முறைகள் இதை அவர் திறம்பட செய்திருக்கிறார். சுய மார்பக பரிசோதனை, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிதல் மற்றும் உரிய நேரத்திற்குள் பெற்ற சிகிச்சை அவருக்கு மீண்டும் நல்ல தரத்திலான வாழ்க்கையை தந்திருக்கிறது.  உரிய காலஅளவுகளில் சுய மார்பக பரிசோதனையை செய்துகொள்ள பெண்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு இயல்பானது என்ன என்று முதலில் அவர்கள் அறிவதும் மற்றும் அதன்பிறகு மிக ஆரம்ப நிலையிலேயே ஏதேனும் கட்டி அல்லது மாற்றம் இருப்பது உணரப்படுமானால், மருத்துவரிடம் அதுபற்றி தெரிவிப்பதும் அவசியம். அருகிலுள்ள மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய புற்றுநோய் கண்டறிதல் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள பெண்கள் தயங்காது முன்வர வேண்டும்.  இதன்மூலம் ஒரு மி.மீ. என்ற சிறிய அளவிலான புற்றுத்திசு வளர்ச்சியையும், புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களையும் கூட கண்டறியவும் மற்றும் ஆரம்பத்திலேயே அதற்கு சிகிச்சை பெறவும் முடியும்.  மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க வெவ்வேறு அணுகுமுறைகள் இப்போது இருக்கின்றன.  மார்பகங்களை அகற்றாமல், அப்படியே வைத்துக்கொள்வது, காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை மற்றும் நவீன கதிரியக்க சிகிச்சை ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு