இன்று ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத்

ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித அர்த்தம் தோய்ந்தே இருக்கின்றன. இஸ்லாமியர்களின் மற்றைய பெருநாட்களை விட, இந்த ‘ஹஜ்’ திருநாள் கொண்டாட்டத்தில் கூடுதல் அர்த்தம் பொதிந்திருக்கிறது. இறைக்கட்டளைக்கு பணிந்து பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது.ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான நாளாகவும் இப்பண்டிகை நாள் இருக்கிறது.இந்தியாவில் ஹஜ் பெருநாளை ‘பக்ரீத்’ என்கிறோம். ‘பக்ரி’ என்றால் ‘ஆடு’ பொருள் தருகிறது. இவ்வகையில் ஆட்டை அறுத்து குர்பானி தரப்படுவதால், இந்த பெருநாளை ‘பக்ரீத்’ என்றழைப்பது வழக்கமாகி இருக்கிறது. இறைவன் அளித்த உயிர், உடமை, நேரம் என அனைத்தையும் எச்சூழலிலும் தியாகம் செய்கிற உன்னத உணர்வின் ஆணி வேராகவே ‘குர்பானி’ விளங்குகிறது.உலகின் அத்தனை இஸ்லாமிய மக்களையும் ஓரிடத்தில் திரளச் செய்கிற அற்புத ஒற்றுமை மாநாட்டை ஹஜ் கடமை தருகிறது. வசதி படைத்தோர், வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையேனும் அரேபிய நாட்டுக்குச் சென்று, ஐம்பெரும் இஸ்லாமிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். கலிமா (இறை உறுதி), தினமும் ஐந்து வேளை தொழுகை, ரமலான் மாதம் நோற்கும் நோன்பு, கூடுதல் வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்கும் ஜக்காத் என்ற கடமைகளின் தொடர்ச்சியாக ஐந்தாம் கடமையான ஹஜ் நிறைவேற்றப்படுகிறது.‘ஹஜ்’ என்றால் ‘புறப்படுதல்’ அர்த்தம் தருகிறது. அரேபிய மண்ணிற்கு புறப்பட்டு அங்கு பல்வேறு வழிபாடுகளை முடித்து திரும்புகின்றனர். பாவங்கள் போக்கும் நாட்களாக மட்டுமல்ல… தியாகத்தின் மேன்மை உணர்ந்து இறையச்சத்த்தில் அன்று பிறந்த பாவமற்ற பாலகராக மாறும் அதிசயத்தையும் இஸ்லாமியர்களுக்கு இந்த ‘ஹஜ்’ தருகிறது. இப்பண்டிகை நாளில் ஆட்டை அறுத்து நிறைவேற்றும் குர்பானி நிகழ்வானது, இறைவனின் நெருக்கத்தை, இறையச்சம் அதிகப்படுத்துதலை வழங்குகிறது.தியாகத் திருநாள் வரலாறுஇப்ராஹிம் நபிகளார் தன் காலத்தில் ‘இறைவன்தான் எல்லாமும்.. அவனுக்கு இணை ஏதும் இல்லை’ எனும் இறைப்பற்றுடன் வாழ்ந்திட்டார். அவருக்கு குழந்தைப் பேறு இல்லை. புத்திர பாசம் கிடைக்காத ஏக்கத்தில் தவித்த இப்ராகிமை மகிழ்வுக்கு ஆளாக்கும் வகையில், அவரது மனைவி ஹாஜரா அம்மையாருக்கு நபி இஸ்மாயில் பிறந்தார். இப்ராகிம் நபிகளாரின் வாழ்க்கை இதன்பிறகு மேலும் இன்பமயமானதுடன், இறைவன் மீதான பற்றும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு போனது. ஒருநாள் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபிகளார் இப்ராகிம், தன் மகனை தானே இறைவனுக்காக குர்பானி செய்வதாக கனவு கண்டார். இதன் பிறகு கவலையில் ஆழ்ந்து போன அவர், தம் அன்பு மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார்.மகனோ, ‘கனவில் வந்த இறைக் கட்டளையை ஒருபோதும் தாமதப்படுத்தாமல், உடனே நிறைவேற்றுங்கள் தந்தையே!’ என்று நபி இஸ்மாயில் பணிந்தார். பிள்ளை பாசத்தால் தந்தை மனம் மாறிடக்கூடாதே என்றெண்ணிய இஸ்மாயில், தன் தந்தையின் கண்களைத் துணியால் கட்டி, பெரிய வாள் ஒன்றினையும் அவரே கொண்டு வந்து தந்தை கரத்தில் தந்தார். வெட்டும் அரிவாள் தந்தையிடம், வாளின் முனையில் மகனின் கழுத்து… அப்போதுதான், ‘ஜிப்ரயீல்’ எனும் வானவரை அனுப்பி இறைவன் அந்த குர்பானியைத் தடுத்தான். அங்கே ஓர் ஆட்டை இறக்கிவைத்து, இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் குர்பானியிடுமாறு இபுராஹிமுக்குக் கட்டளையிட்டான்.இறைவனுக்காக, மகனின் உயிரையே பலி கொடுக்க துணிந்த தந்தையின் தியாகம் மகத்தானது. நரபலியை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். இச்சம்பவத்தின் நினைவாகவே இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாள் என்ற தியாகத் திருநாளில், குர்பானி நிறைவேற்றுகின்றனர். இந்நாளில் குர்பானியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து… ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு… மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர்….

Related posts

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை