சென்னை: இனமானப் பேராசிரியர் காட்டிய சுயமரியாதைமிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திராவிடக் கொள்கையே உயிரெனக் கொண்டவர். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழராய் இருந்து இயக்கம் காத்தவர்.என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் அறநெறி ஆசானாகவும் இருந்தவர். தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என்பதை ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழங்கியவர். தமிழ்நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்.திராவிடக் கருத்தியலைப் பயிற்றுவித்து, இளைய தலைமுறையினருக்குக் கொள்கை உரம் ஊட்டியவர். கழகத்தின் பொதுச் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அயராது செயலாற்றிய இனமானப் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தி, அவர் காட்டிய சுயமரியாதைமிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் என உறுதியேற்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….