இந்த ஆண்டு முதல் முறையாக மேட்டூர் அணை நிரம்பியது: 20,000 கன அடி உபரிநீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 25,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 22,000 கனஅடியாக குறைந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 27,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 26,440 கனஅடியாக குறைந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 350 கனஅடி திறக்கபட்ட நிலையில் நேற்று காலை முதல் 150 கனஅடியாக குறைக்கப்பட்டது. திறப்பை விட வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 30ம் தேதி 109.70 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 119 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து கணிசமான அளவில் உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நிரை கால்வாயில் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காலை 5 மணிக்கு விநாடிக்கு 5,000 கனஅடியாக  திறக்கப்பட்ட உபரிநீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 6.30 மணி முதல் 20,000 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்றிரவு அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு 22,538 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. எந்நேரத்திலும் 16 கண் மதகு வழியாக, அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் அப்படியே திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பூலாம்பட்டி பரிசல் துறையில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மின்உற்பத்தி துவங்கியதுமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், அணை மின்நிலையம், சுரங்கமின்நிலையம் மற்றும் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணைகளில் மின்உற்பத்தி துவங்கியது. அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு உட்பட 7 கதவணைகளில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது….

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு