இணையவழி இடுபொருள் விற்பனை: வேளாண்மை அதிகாரி தகவல்

தேனி, மே 11: தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கான இடுபொருள்களை இணையவழியில் ஆர்டர் செய்து இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி தெரிவித்துள்ளார்.
மண்ணும், நீரும் விவசாயத்தின் இரு கண்கள் என்றால் விவசாய இடுபொருள்கள்தான் மூன்றாவது கண்ணாக உள்ளது. விவசாயிகள் அதிக மகசூல் பெற தரமான இடுபொருள்களை பயன்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டே கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரமான இடுபொருள் விவசாயிகளுக்கு இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளும் வகையில் அக்ரிகார்ட் எனப்படும் இணையவழி இடுபொருள் விற்பனை கடந்த ஏப்.14ம் தேதி முதல் தமிழக அரசு துவக்கி உள்ளது.

இதன்மூலம் பருவத்திற்கேற்ற இடுபொருள்களை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பயிர் ரகங்களை < www.tnauagricort.com > என்ற இணையதள முகவரியில் ஆர்டர் செய்து விவசாயிகள் விரும்பிய இடங்களுக்கு வரவழைத்துக் கொள்ளலாம். தற்சமயம், ஏஎஸ்டி 16, ஏடிடிஆர் 45, கோ 51, கோ 55, பிபிஎஸ் 5 போன்ற நெல்ரகங்களும், கோ 8, விபின் 4 பாசிப்பயறு ரகங்களும், விபின்8, விபின் 11 உளுந்து ரகங்களும், நிலக்கடலை மற்றும் காய்கறி விதைகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பருவ காலங்களில் விவசாயிகள் விரும்பும் விதைகளை தேடி அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே உணவு பொருள்களை ஆர்டர் செய்வது போல இணையவழியில ஆர்டர் செய்து சரியான தரமான இடுபொருள்களை சரியான விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதனால் கடுமையான விவசாய பணிகளுக்கிடையே ஏற்படும் நேர விரயத்தையும், அலைச்சலையும் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி