ஆற்காட்டில் பரபரப்பு தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ₹24 லட்சம் மோசடி-நகை மதிப்பீட்டாளர் உட்பட 2 பேர் கைது

ஆற்காடு : ஆற்காட்டில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ₹24 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் ஆற்காடு அமீன் பிரான் தர்கா தெருவை சேர்ந்த தனியார் ஏஜென்சி நடத்தி வரும் அசோக்குமார்(35) என்பவர் கடந்த ஓராண்டாக அடிக்கடி  நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த நகைகளை வங்கியின் நகை மதிப்பீட்டாளராக உள்ள ஆற்காடு தேவி நகரை சேர்ந்த சுரேஷ்(47) ஆய்வு செய்து ஒரிஜினல் நகை என்று கூறி பணம் வழங்க பரிந்துரை செய்துள்ளார். மொத்தம் ₹24 லட்சம் நகை கடனாக அசோக்குமார்  பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் வங்கியில் நகைகளை சரிபார்த்து ஆய்வு செய்தபோது அசோக்குமார் போலி நகைகளை அடமானம் வைத்து ₹24 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதற்கு, நகை மதிப்பீட்டாளர் சுரேஷ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர் அவர்களிடம் விசாரித்தபோது அதற்குண்டான பணத்தை திருப்பி கட்டி விடுவதாக கூறி உள்ளனர். ஆனால், பணத்தை கட்டாமல் இருந்துள்ளனர். எனவே, மேற்கண்ட மோசடி குறித்து தனியார் வங்கியின் கிளை மேலாளர் கோபி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அசோக்குமார்,  சுரேஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அசோக்குமார் 10 முறையும், அவரது மனைவி உமா ஒருமுறையும் வங்கியில் நகை அடமானம் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, உமாவையும் போலீசார் தேடி வருகின்றனர். போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ₹24 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது