ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ20 லட்சத்தை இழந்ததால் கான்ட்ராக்டர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

திருவொற்றியூர்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ20 லட்சம் இழந்ததால் கான்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கொரோனா காலத்தின்போது வீட்டில் ஓய்வாக இருந்த பலர், பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கினர். ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். அதனால் பணத்தின் மீதும் அந்த விளையாட்டின் மீதும் மோகம் அதிகமாகும். அதற்கு பிறகு பின்னடைவுதான். பணத்தை இழந்து கொண்டே இருப்பார்கள். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதற்காகவே தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் ஈடுபடுவார்கள். ஆனாலும் பண இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். இழந்த பணத்தை பெறவே முடியாது. ஒரு கட்டத்தில் கையில் இருந்த பணத்தை மட்டுமின்றி பொருளையும் இழந்து கடன் வாங்கி நிற்கதியாகும் அவல நிலைக்கு தள்ளிவிடும். கடைசியில் மன அழுத்தம் அதிகமாகி குடும்பத்திற்குள் தகராறு வலுக்கும். குடும்பமும் பிரிந்து விடுகிறது.சமீபகாலமாக இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான பலர் பணத்தை இழந்ததோடு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போன்ற எண்ணங்களும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் அடிமைத்தனத்தால் வருகிறது. சமீபத்தில் மணலி புதுநகரில் ஒரு பட்டதாரி பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்த சம்பவம் நடந்தது. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தற்கொலை சம்பவத்தை தடுக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் இயற்றப்படும் என தெரிகிறது.இந்நிலையில், மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ20 லட்சத்தை இழந்த கான்ட்ராக்டர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மணலி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (37). வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் கான்ட்ராக்டர். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு பிரனவ் (8), பிரவீன் (6)  என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நாகராஜன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். வழக்கம் போல ஆரம்பத்தில் வருமானம் வந்ததால் நாகராஜனுக்கு ஆர்வம் அதிகமானது.  நாளடைவில் வேலைக்கும் போகாமல் கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் ரம்மி ஆடினார். இதனால் வரலட்சுமி, பலமுறை அறிவுரை கூறியுள்ளார். அதை நாகராஜன் ஏற்கவில்லை. தகராறுதான் ஏற்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வாங்கி ரம்மி ஆடியதால் ரூ20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.நேற்று முன்தினம் வரலட்சுமியின் பெற்றோர்களும், நாகராஜனின் பெற்றோர்களும் சேர்ந்து, நாகராஜனுக்கு அறிவுரை கூறினர். ‘ரம்மி விளையாட்டை விட்டு விட்டு வேறு தொழில் பாருங்கள்’ என்று கூறினர். அப்போது, ‘தான் செய்த தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் ஆன்லைன் ரம்மி விளையாட மாட்டேன்’ என்று நாகராஜன் கூறினார். ‘ரம்மி விளையாடக் கூடாது என்பதற்காக  செல்போனையும் அடமானம் வைத்தார். பணத்தை இழந்ததால் மரியாதை போய்விட்டதே’ என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் குடிப்பதற்காக படுக்கையில் இருந்து எழுந்தார் வரலட்சுமி. அப்போது ஏதேச்சையாக கணவர் படுத்திருந்த அறைக்கு சென்றபோது, தூக்கில் தொங்கியபடி நாகராஜன் துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களது உதவியுடன் கணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் ஏற்கனவே நாகராஜன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நாகராஜன் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரது அறைக்கு சென்றனர். அங்கு சோதனை செய்தபோது, நாகராஜன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ20 லட்சம் இழந்து கடனாகி விட்டது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதியிருந்தது. கடிதத்தை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு