ஆன்லைன் பகுதிநேர வேலை ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம் ₹5.65 லட்சம் மோசடி: வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர், ஜூலை 31: ஆன்லைன் பகுதி நேர வேலை என்று ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ₹5 லட்சத்து 65 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் ஏரியூரை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாக வாட்ஸ்அப்பில் தகவல் வந்துள்ளது. இதை பார்த்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அனுப்பும் லிங்கில் உள்ள பொருட்களை லைக் செய்து ஸ்கிரீன் ஷாட் செய்து அனுப்பினால் பணம் வரும் என்று தெரிவித்துள்ளனர். அதை நம்பிய இளம்பெண் அவர்கள் அனுப்பிய பொருட்களை லைக் செய்து ஸ்கிரீன் ஷாட் செய்து அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிற்கு ₹750 வந்துள்ளது.

தொடர்ந்து டெலிகிராமில் சைலா மகேந்திரா என்பவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ‘https://www.dailiht0895.com’ என்ற இணையதளத்தில் பதிவு செய்து முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய இளம்பெண் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி கடந்த மார்ச் 8ம் தேதி வரை பல தவணைகளாக ₹5 லட்சத்து 65 ஆயிரத்தை அந்த வெப்சைட்டில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அதில் ₹10 ஆயிரத்து 400ஐ மட்டும் திருப்பி இளம்பெண்ணின் கணக்கில் செலுத்தியுள்ளனர். மீதி பணத்தை எடுக்க முயன்றபோதுதான் அது போலியான லிங்க் என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ சதீஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சாலை விபத்தில் மாணவர் பலி: நண்பர் படுகாயம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

வேடசந்தூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முன்விரோதத்தில் கொன்றது அம்பலம்