ஆன்லைனில் இழந்த ₹6.19 லட்சத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார் உரியவரிடம் ஒப்படைப்பு பகுதிநேர வேலைவாய்ப்பு என நூதன மோசடி

திருவண்ணாமலை ஜூன் 29: பகுதிநேர வேலைவாய்ப்பு எனும் நூதன மோசடியில் சிக்கி ஆன்லைனில் இழந்த ₹6.19 லட்சத்தை மீட்டு உரியவரிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, கேளூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்தியன்(27). பிஎஸ்சி பட்டதாரி. சமீபத்தில் இவரது டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) இணைப்பு வந்தது. அதில், பகுதிநேர வேலைவாய்ப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக என குறிப்பிட்டு இருந்தனர். அதோடு, அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட இணையதளத்தில் பணத்தை செலுத்தினால், வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததை நம்பி, தனது சேமிப்பு கணக்கில் இருந்து ₹6.19 லட்சத்தை ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் பல்வேறு தவணைகளில் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த இணையதளத்தில் பல்வேறு பணி (டாஸ்க்) கொடுக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதை தொடர்ந்து குறைந்தபட்ச தொகைகள் அனுப்பப்பட்டன. ஆனால், அதன் பிறகு அந்த இணையதளத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. திட்டமிட்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்தியன், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தொடர்ந்து, சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி பழனி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை செய்தனர். விரைந்து செயல்பட்டு பட்டதாரி வாலிபர் இந்தியன் இழந்த பணத்தை மீட்டனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்திற்கு அவரை நேற்று வரவழைத்து, மீட்ட ₹6.19 லட்சத்தை மீண்டும் அவரிடம் கூடுதல் எஸ்பி பழனி ஒப்படைத்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை