ஆந்திராவை சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் 5 பேருக்கு தர்மஅடி ஒடுகத்தூர் அருகே பரபரப்பு ஆடு திருட வந்த கும்பல் என சந்தேகித்து

ஒடுகத்தூர், அக்.22: ஒடுகத்தூர் அருகே ஆடு திருட வந்த கும்பல் என சந்தேகித்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூம்பூம் மாட்டுகாரர்கள் 5 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் ஒரு சிலர் வளர்த்து வரும் ஆடுகள் அடிக்கடி காணாமல் போனது. இதனால், யாரோ மர்ம நபர்கள் ஆட்டை திருடியுள்ளனர் என்று நினைத்து இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பைக்கில் 5 பேர் கொண்ட கும்பல் கழுத்தில் மாலை அணிந்து வீடு வீடாக சென்று நிலக்கடலை, அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்கள் மற்றும் காசு போன்றவை சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் ஆடு திருடர்கள் என சந்தேகமடைந்த ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் வீடு வீடாக சுற்றித்திரிந்த 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர், அங்குள்ள கோயில் அருகே அமர வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் பொய்கை பகுதிக்கு வந்து, அங்கு கூடாரம் அமைத்து ஊர்ஊராக சென்று தானியங்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றும், இந்தாண்டும் பொய்கை பகுதியில் கூடாரம் அமைத்து ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் எந்தெந்த கிராமங்களுக்கு செல்லலாம் என சுற்றிப்பார்க்க வந்தோம். இந்த பகுதிக்கு முதல்முறை வந்தோம் என தெரிவித்தனர்.

ஆனாலும், போலீசார் அவர்களது அடையாள அட்டைகளை வாங்கி, சம்பந்தப்பட்ட மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளதா என்ற விவரங்களை சேகரித்தனர். பின்னர், குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என உறுதி செய்த பிறகு, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், ஊரில் யாராவது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதுபோன்று நீங்களே சட்டத்தை கையில் எடுக்க கூடாது என ஊர்மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆடு திருட வந்தவர்கள் என சந்தேகப்பட்டு 5 பேரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி