ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

கடலூர், செப். 27: ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு வாலிபர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை சோதனை செய்தபோது, அவர் ஒரு பையில் பெட்ரோல் பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த குற்றவியல் அலுவலக மேலாளர் பலராமன், அங்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.

அதில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சத்தியமூர்த்தி (17) என தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், சத்தியமூர்த்தியின் தாத்தா வீராசாமி என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதனை கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை வாங்கி சத்தியமூர்த்தியின் பெயரில் பதிவு செய்துள்ளார். அந்த இடத்தில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைத்துள்ளனர். இதனால் நான் வீட்டுமனை இல்லாமல் தவித்து வருகிறேன். எனவே இது குறித்து விசாரணை நடத்தி எனது இடத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், அவருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி