ஆடு திருடிய வழக்கில் வாலிபர் கைது

 

காரமடை, ஆக. 2: காரமடை அருகே உள்ள சென்னிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (43). இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். மேலும், ஆடுகளையும் வளர்த்து வருகிறார். கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்று பார்த்த போது ஆட்டை திருடி கொண்டு மர்ம நபர் ஒருவர் ரோட்டோரத்தில் தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து புவனேஸ்வரி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் கண்ணார்பாளையம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காரமடை திம்மம்பாளையம் ஏழுசுழி பகுதியைச்சேர்ந்த ரஞ்சித் குமார்(23) என்பதும், சென்னிவீரம்பாளையத்தில் கடந்த 30ம் தேதி புவனேஸ்வரியின் ஆட்டினை திருடிச்சென்றதும் தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார் மீது காரமடை காவல் நிலையத்தில் ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காரமடை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை