அரியமங்கலம் குப்பை கிடங்கில் மீண்டும் தீ

திருச்சி, ஆக.4: திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தீயை மாநகராட்சி ஊழியர்கள் ‘ஜெட் ராடு’ என்ற நவீன கருவியின் துணையுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கு இருந்து வருகிறது. இங்கு மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று குப்பை கிடங்கு தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகையால் குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இதே போன்று அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூன்று நாட்களாக போராடி அணைத்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பகுதியில் பற்றிய தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம், அம்பிகாபுரம், கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் டேங்கர் லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ‘ஜெட் ராடு’ என்ற நவீன கருவியை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Related posts

புறவழிச்சாலை அமைக்கக்கோரி ஒன்றிய அமைச்சரிடம் தேனி எம்பி மனு

மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 126 பேர் கைது

தேனி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை