அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1.67 லட்சம் மோசடி: தேனி வியாபாரிக்கு வலை

 

தேனி, ஜூன் 26: தேனியில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1.67 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (எ) மகாதனதேவ்(46), தேயிலை வியாபாரி. இவர், சென்னை தலைமை செயலகத்தில் தனக்கு நன்கு தெரிந்த அதிகாரிகள் உள்ளதாகவும், அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் பலரிடம் கூறி வந்துள்ளார்.

இதனை நம்பி, தேனி அல்லிநகரம் சொக்கப்பம்மன் தெருவை சேர்ந்த நாகராஜ் மனைவி அம்பிகா(36), தனக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி சுரேஷை அணுகியுள்ளார். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதற்கு ரூ.1.5 லட்சமும், சென்னை சென்று வர பயணச்செலவுக்கு ரூ.17 ஆயிரமும் சுரேஷிடம், அம்பிகா கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கூறியபடி வேலை வாங்கி தராத சுரேஷ், வாங்கிய பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்துள்ளார். இது குறித்து தேனி எஸ்.பி. அலுவலகத்தில் அம்பிகா புகார் அளித்தார். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் அந்த மனு மீது அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மேலும் 2 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சுரேஷ் பணமோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷை தேடி வருகின்றனர்.

Related posts

சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு

ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் விற்ற கடைகளிடம் ரூ.1.17 லட்சம் அபராதம் வசூல்