அரசு பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12, 13ம் தேதிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் ஜூன் 30ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களான ஈரோட்டை சேர்ந்த ராஜவேலு, சேலத்தை சேர்ந்த அருள்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தலைமை ஆசிரியர்களாக மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து உள்ளதால் பணியிட மாறுதலுக்கு முழு தகுதி உள்ளது. பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.அரசு தரப்பில், பணியிட மாறுதல் தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டி உள்ளதால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, ஜூலை 13ல் நடக்க உள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும். இந்த மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு