அரசு அருங்காட்சியகத்தில் ஈமு கோழியின் முட்டை காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஈமு கோழியின் பிரம்மாண்டமான முட்டை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு அரிய வகை பொருளை காட்சிப்படுத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி, இந்த மாதம் ஈமு கோழி முட்டையை காட்சிக்கு வைத்துள்ளனர். இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட ஈமு கோழி, பறவை இனங்களில் நெருப்புக் கோழிக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும். இது பொதுவாக 2 மீட்டர் உயரமும், 50 கிலோ எடையும் கொண்டதாகும். நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடியது. உணவில்லாமல் ஒருவாரம் கூட தாக்குப்பிடிக்கும். ஈமு கோழி பூச்சி, விதை, தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்ளும். கல், கண்ணாடி மற்றும் சிறு இரும்புத்துகள்களை சாப்பிட்டாலும், அவை ஜீரணமாகும் வகையில் அதன் உணவு மண்டலம் அமைந்துள்ளது. இந்த கோழிகள் மிகக் குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றன. ஈமு கோழியால் பறக்க இயலாது. ஆனால், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் ஓடக்கூடிய திறமை வாய்ந்தது. இக்கோழியின் முட்டை கரும்பச்சை நிறத்தில் 700 முதல் 900 கிராம் எடை கொண்டதாக இருக்கும். பெண் பறவை 15 முட்டைகள் வரை இட்ட பின்பு, ஆண் பறவை 8 வாரங்கள் உணவு, தண்ணீர் இன்றி அந்த முட்டைகளை அடை காத்து குஞ்சு பொரிக்கும். 6 மாதங்கள் வரை குஞ்சுகளை வளர்க்கும். அந்த குஞ்சுகள் வளர்ந்து இரண்டு ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை