அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் எத்தனை சதவீதம் ஒதுக்கீடு

சென்னை:  தமிழகத்தில் பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம், வேளாண்மை, உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பலவேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வந்தது.  அதை ஏற்று தமிழக அரசு, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத்  துறை, கால்நடைத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் அரசுச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவின் முதல்கூட்டம் சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் தொழில் கல்வியில் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்கள் குழுவிடம் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்கவும் இந்த குழு முடிவு செய்துள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிகிறது. இந்த பரிந்துரைகளின் பேரில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது போல 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.  இந்த கூட்டத்துக்கு பிறகு நீதிபதி முருகேசன் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதால் அவர்களின் சமூக பொருளாதாரம் மாறுபடும். துறைவாரியான கோப்புகள் மற்றும் தரவுகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இந்த அறிக்கை ஒருவாரத்தில் கிடைக்கும். அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரையாக அளிக்க உள்ளோம். அரசு நிர்ணயித்த ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி முருகேசன் தெரிவித்தார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு