அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி கூலியை உயர்த்த வேண்டும்: விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

ஈரோடு, செப். 26: அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள் உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்கக்கோரி விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு, திருப்பூர், கோவை திருச்செங்கோடு சரகங்களை சார்ந்த தொடக்க விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தமிழக கைத்தறித்துறை இயக்குநருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள் திட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டின் கீழ் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு அரசுக்கு உரிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் சங்கங்களுக்கு வரவேண்டிய சுமார் ரூ.44 கோடி 20 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. இதிலும், ரூ.79 கோடி நிலுவையில் உள்ளது. வங்கி கடன் மூலமாக வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. சங்கங்களுக்கு வரவேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே நிலுவை தொகையை உடனடியாக சங்கங்களுக்கு விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் வேட்டி-சேலைகள் உற்பத்தி திட்டம் ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு மட்டுமே கால நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாதங்களுக்கு வேட்டி உற்பத்தியும், ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு சேலை உற்பத்தியும் மேற்கொள்ளும் வகையில் மூலப்பொருட்களை அரசு வழங்க வேண்டும். இதனால் ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேட்டி-சேலைகளை காலதாமதம் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியும். வேட்டி-சேலைகள் உற்பத்தி திட்டத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.488 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நூல் விலை 150 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், நெசவாளர்களின் கூலி கடந்த 2019ம் ஆண்டு முதல் உயர்த்தப்படவில்லை. எனவே வேட்டி-சேலைகள் உற்பத்தி கூலியை ஊடை இழைக்கு (பெர் பிக்) 3 பைசா வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல் நூல் விலையை பொறுத்து திட்டத்துக்கான நிதியை 35 சதவீதம் உயர்த்தி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா