அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: சென்னை வீட்டில் பரபரப்பு பேட்டி

சென்னை: அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்காமல் அதிமுகவின் ஒற்றுமையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக 50 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணித்து, இரு தலைவர்களின் தம்பிகளாக, சகோதரர்களாக, பிள்ளைகளாக அவர்களின் கட்டளைகளை ஏற்று எங்கள் அரசியல் பாதையை வகுத்து இருக்கிறோம். இன்றைக்கும் சென்று கொண்டு இருக்கிறோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அசாதாரணமான சூழ்நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். ஆகவே இதற்கு முன்பு ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும், யாரும் இனிமேல் மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு, அதிமுகவின் ஒற்றுமையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்கரை ஆண்டு காலம் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவருடன் முழு ஒத்துழைப்போடு பயணித்து இருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எங்கள் கடமை. அதேபோல் அதிமுகவின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்களின் எண்ணப்படி, கூட்டுத்தலைமையாக அதிமுக செயல்படும் என்பதுதான் எங்கள் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு, நானும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் சட்ட விதிகள்படி எங்கள் பணிகளை நிறைவாக ஆற்றினோம். நாங்கள் இணைவது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என்றார்.இதன் மூலம் அதிமுகவில் சமரசத்துக்கு தயார் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உள்ளார். இதன் காரணமாக, பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.* இணைந்து செயல்படலாம்: எடப்பாடிக்கு ஓபிஎஸ் அப்பீல்சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் அப்பீல் விடுக்கிறேன். அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி உள்பட பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவரிடம் அப்பீல் செய்து உள்ளேன்’’ என்றார்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு