அதிவேக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு: கள்ளிக்குடியில் மேம்பாலம் தேவை

திருமங்கலம்: அதிகரித்து வரும் சாலைவிபத்துகளை தவிர்க்க கள்ளிக்குடியில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை – நெல்லை நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி உள்ளது. தாலுகா தலைநகராக உயர்ந்துள்ள கள்ளிக்குடி, நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் சாலையை கடக்க பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கள்ளிக்குடி – டி.கல்லுப்பட்டி ரோட்டினை கடக்க முயலும் போது பலரும் மின்னல்வேகத்தில் வரும் வாகனங்களில் சிக்கும் அவலநிலை தொடர்கிறது. இதே போல் போலீஸ் ஸ்டேஷனையொட்டியுள்ள காரியாபட்டி விலக்கு பகுதியிலும் விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் இருந்தும் கள்ளிக்குடி பகுதியில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கள்ளிக்குடி நகரில் பலனில்லை. விபத்துகள் குறைந்துபாடு இல்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே, கள்ளிக்குடி பகுதியில் மேம்பாலம் அமைப்பதே விபத்தை குறைக்க ஒரே வழி என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனர். மதுரையிலிருந்து மேலூர் வழியாக திருச்சி நான்குவழிச்சாலையில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. ஆனால், அந்த சாலையில் மேம்பாலங்கள் அதிகளவில் உள்ளதால் கிராமபுறங்களில் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால், மதுரை நெல்லை நான்கு வழிச்சாலையில் மதுரை மாவட்டத்திற்குள் எந்த ஒரு கிராமத்திலும் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் அதிகளவில் விபத்துகள் உண்டாகின்றன. எனவே, கள்ளிக்குடி கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து கீழ் புறத்தில் சர்வீஸ் ரோட்டினை ஏற்படுத்தினால் விபத்துகள் குறையும். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதனை கவனத்தில் கொண்டு கள்ளிக்குடி பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்….

Related posts

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை