அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓ.பி.எஸ்., இபிஎஸ்சுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வானகரத்தில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரத்தில்  ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை எனக்கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, திட்டமிட்டபடி  பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார். நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். மேலும்,அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பாகும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 1ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, நீதிமன்றத்தின் உத்தரவு முழுவதுமாக மீறப்பட்டுள்ளது. 23 தீர்மானங்கள் தவிர எந்த தீர்மானத்தையும் முடிவு செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கட்சியின் அவைத்தலைவரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அவைத்தலைவர் நியமனமே நீதிமன்ற அவமதிப்பு என்ற நிலையில் அவர் அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அறிவித்துள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் முடிவடையவில்லை. பொதுக்குழுவை நடத்துவதற்காக கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். ஆனால், அவரை நிரந்தர அவைத்தலைவராக கொண்டு வரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார்.எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்ததல்ல என்பதுதான் எங்கள் தரப்பு வாதம். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு புதன்கிழமை (நாளை) விசாரணைக்கு வரவுள்ளது என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பான கோரிக்கையை சிவில் வழக்கு நிலுவையில் உள்ள தனி நீதிபதியிடம்தான் கேட்கவேண்டும். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக செயல்பட்டதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் விசாரிக்கப்படும். மேலும், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அதன் முடிவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரும் 7ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை