அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடிய விவகாரம் தடயவியல் உதவி இயக்குநருடன் சிபிசிஐடி விசாரணை குழு 5 மணி நேரம் சோதனை

* ஜெயலலிதா அலுவலக அறையிலும் ஆய்வு* ஆபிசின் அனைத்து இடங்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுசென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், நேற்று தடயவில் உதவி இயக்குநர் ஷைபா உதவியுடன் அலுவலகத்தில் ஜெயலலிதா அலுவலக அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 5 மணி நேரம் ஆய்வு செய்தனர். சேதம் குறித்து வீடியோ பதிவுகளுடன் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.அதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் நோக்கில் பூட்டை உடைத்து உள்ளே சென்று போட்டி கூட்டம் நடத்தியும், அங்கிருந்த அலுவலக ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்து சென்றதுடன், கட்சி ஆபிசையும் தொண்டர்களில் ஒரு தரப்பினர் சூறையாடினர். இந்த பிரச்னை தொடர்பாக எடப்பாடி ஆதரவாளர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது தனித்தனியாக மொத்தம் 3 வழக்குகள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த தனிப்புகாரின் படி ராயப்பேட்டை போலீசார் திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசாரின் கைதுக்கு பயந்து எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவார்கள் என மொத்தம் 65 பேர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர். அதேநேரம், இந்த வழக்கு தமிழக அரசு உத்தரவுப்படி மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர், அதிமுக அலுவலம் சூறையாடிய வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிக்குழு அமைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், மோதல் வீடியோ பதிவுகளை ராயப்பேட்டை போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன்படி சிபிசிஐடி விசாரணை அதிகாரியான டிஎஸ்பி வெங்கடேசன், புருஷேத்தமன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரம்யா, ரேணுகா, லதா, செல்வின் சாந்தகுமார் உட்பட 20 சிபிசிஐடி போலீசார் நேற்று காலை 7.30 மணி அளவில் ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.அப்போது, சிபிசிஐடி குழுவினர் தடயவியல் துறை உதவி இயக்குநர் ஷைபா உடன் அலுவலகத்தின் கதவுகள், ஜெயலலிதா பயன்படுத்திய அலுவலக அறை, கோப்புகள் பராமரிக்கப்பட்ட அறை என அனைத்து இடங்களும் வீடியோ பதிவுடன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்து பத்திரங்கள், விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட பொருட்கள் அங்கு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் உடைக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், அதன் சேத மதிப்பு குறித்தும் தனியாக ஆய்வு செய்தனர். அதோடு இல்லாமல் அதிமுக அலுவலகம் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்று ‘டேப்’ மூலம் அளக்கப்பட்டது. இந்த ஆய்வு 5 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. அப்போது அலுவலகம் தாக்கப்பட்டபோது வெளியான வீடியோ பதிவுகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இந்த ஆய்வின்போது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார். பின்னர், சிபிசிஐடி விசாரணை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் என வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளதால் மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு