அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனத்துடனான 20,000 டன் துவரம் பருப்பு வாங்கும் டெண்டர் ரத்து: புதிய டெண்டரால் ரூ.100 கோடி இழப்பு தவிர்ப்பு…அரசு அதிரடி உத்தரவு

சென்னை: ரேசன் கடைகளுக்கு விநியோகிக்க 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்ததால், தமிழக அரசு நேற்று அந்த டெண்டரை ரத்து செய்தது. தற்போது புதிய டெண்டர் கோரியதன் மூலம் அரசுக்கு ஏற்பட  இருந்த ரூ.100 கோடி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2020ம் ஆண்டு ரேசன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு  கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி  நிறுவனத்துக்கு இந்த டெண்டர் ஒதுக்கப்பட்டது. இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் நிலையில், ரூ.143க்கு கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் எடுத்திருந்தது. கூடுதல் விலைக்கு  டெண்டர் கொடுக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் புகார் எழுப்பி இருந்தது. இந்த ஊழலுக்கு அப்போதைய அதிமுக அமைச்சர் காமராஜ், துறை அதிகாரியான சுதாதேவி  ஐஏஎஸ்,  ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர்   உடந்தை என சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட  விசாரணையில், அதிகாரிகள் மற்றும் கிறிஸ்டி நிறுவனம் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி கடந்த வாரம் அதிரடியாக  மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு புகார் உறுதியானதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பருப்பு கொள்முதல் விலை கிலோ ரூ.100க்கு குறைவாகவும், 20 ஆயிரம்  டன்  தேவை என்றும் இ-டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டர் ஏலம்  ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் புதிய டெண்டர் கோரியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. குறிப்பாக சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வருமானவரி சோதனையில் சிக்கிய நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் சுதாதேவி, 3 ஆண்டுகளுக்கு பிறகு அப்பதவியில் இருந்து கடந்த  14ம்தேதி நீக்கப்பட்டார்.   இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கூறியதாவது: புதிய ஆட்சி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மே 5ம் தேதி 20ஆயிரம் டன் பருப்பு கொள்முதலுக்கு டெண்டர் திறக்கப்படுகிறது. மே 5ம்தேதி திறக்கப்பட்ட டெண்டரிலும்  சந்தை மதிப்பு ₹100 இருந்தும் கூட அவர்கள் ₹143க்கு கொட்டேஷன் கொடுத்திருந்தனர். சுதாதேவி ஐஏஎஸ் அதிகாரி இதை ரத்து செய்யாமல் அவர்களுக்கு டெண்டர் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நமக்கு நேரடியாக ₹100 கோடி இழப்பு ஏற்பட  வாய்ப்புள்ளது என்று புகார் அளித்திருந்தோம். தற்போது அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மீண்டும் தமிழக அரசு இ-டெண்டர் விட்டிருப்பது பாராட்டத்தக்கது. கிறிஸ்டி போன்ற ஒரு நிறுவனம் தான் இதில் பங்கேற்க முடியும் என்பது உடைத்தெறியப்படுவது மிக அவசியம். அது  மட்டுமல்ல நாங்கள் கேட்டிருந்த டெண்டர் விதிகளிலும் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. வரக்கூடிய பாமாயில் உள்ளிட்ட டெண்டர்களில் நாங்கள் கேட்ட விதிகளில் 80 சதவீதம் அளவுக்கு மாற்றம் செய்துள்ளதும் பாராட்டுக்குரியது. இந்த  ஊழலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.5 ஆண்டுகளில் ரூ.1480 கோடி ஊழல் சர்க்கரை டெண்டர்களில் மட்டும், கடந்த ஒரு ஆண்டில் தமிழக அரசு வாங்கிய 17.5 கோடி கிலோ சர்க்கரையில் மட்டும் அரசாங்கத்திற்கு ரூ.111 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாமாயில் டெண்டர்களில் கடந்த 3 ஆண்டுகளில் வாங்கிய 35  கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பின் மதிப்பு ரூ.499 கோடி. மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 5 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 5 லட்சம் டன் பருப்பு  வகைகளில் ஏற்பட்ட இழப்பு ரூ.870 கோடி. ஆக மொத்தமாக கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ ரூ.1480 கோடி என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக  பெறப்பட்ட அரசு ஆவணங்களை வைத்தும் சந்தை மதிப்பை தெளிவாக கணக்கெடுத்தும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு