அதிமுகவின் அராஜகம்

தமிழகத்தில் 2011 முதல் 2021 மே வரை பத்தாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி அதிமுக. அக்கட்சியின் தலைமைப்பதவிக்காக அடிதடி வரை சென்று, தெருவில் இறங்கி, கற்களை கொண்டு எறிந்தும், பயங்கர ஆயுதங்களோடும் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டது  தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து படுதோல்வியை சந்தித்தது. இதன் விளைவாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோஷத்தை சில முன்னாள் அமைச்சர்கள் முன்னெடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து முட்டல்கள், மோதல்கள் இருந்து வந்தன. இந்த மோதல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியின்போது பெரிதும் வெடித்தது. தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் முழுவதும் வலம் வந்தேன். தொண்டர்கள் ஆதரவு எனக்குத்தான் எனக்கூறி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார் இபிஎஸ். தொடர்ந்து கட்சியில் தனக்கான ஆதரவுக்கூட்டத்தையும் கூட்டினார். கடந்த  ஜூன் 23ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்சுக்கு எதிராக ஒழிக கோஷம் எழுப்பப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூட பார்க்காமல், அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. விரக்தியில் வெளியேறிய ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடையில்லை எனக்கூறி, ஓபிஎஸ்சின் மனுவை தள்ளுபடி செய்தது.நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நேற்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். பதிலுக்கு ஓபிஎஸ், ‘என்னை நீக்க அதிகாரமில்லை. இபிஎஸ், கே.பி.முனுசாமியை கட்சியிலிருந்து நீக்குகிறேன்’ என அறிவித்துள்ளார். இப்படி மாறி, மாறி இருவரும் அறிவித்த செய்தி வலைத்தளங்களில் மீம்ஸ்களாக வெளிவந்து நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது.இது ஒருபுறமிருக்க, பொதுக்குழுவில் புறக்கணிக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக  தலைமை அலுவலகத்திற்கு சென்றபோது, அவர்களை இபிஎஸ் அணியினர் தடுத்தனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. ‘ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’ என முழங்கிய எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் தொண்டர்கள் ரத்தம் சிந்தினர். கற்களை வீசியெறிந்தனர். ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். அதிமுகவினரின் அராஜக வன்முறையால் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக பகுதியே  கலவர பூமியாக காட்சியளித்தது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுக தலைமை கழகத்தை கைப்பற்றினர். பூட்டப்பட்ட கதவுகள் உடைக்கப்பட்டன. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் நேற்று அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.முதல்வர்களாக செயல்பட்ட 2 பேர், தலைமைப்பதவி மோதலால், தமிழகத்தில் தேவையற்ற ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்களாக இருந்த வேலுமணி உள்பட பலரது வீடுகளில் தொடர் சோதனைகள் நடந்து வருகின்றன. விரைவில் பலர் மீது நடவடிக்கை பாயும் என்கிற சூழலில், ஒற்றைத்தலைமை பதவிக்கான மோதல் சம்பவங்கள் அக்கட்சிக்கு மேலும் ஒரு கரும்புள்ளியாகவே அமையும்….

Related posts

ஆருயிர் காப்போம்

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்