அண்ணா நகரில் நள்ளிரவு பரபரப்பு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரேஸ் கார் புகுந்தது: ஒருவர் படுகாயம்

சென்னை:திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு,  தப்பிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அண்ணா நகர் பிரதான சாலையில், பிரபல சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் விற்கப்படுகிறது. இதனால், அண்ணா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு ஷாப்பிங் செய்ய வருவது வழக்கம். எனவே, எந்த நேரமும் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும். வாடிக்கையாளர்களின் சேவைக்காக, ஆண், பெண் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு, உரிமையாளர் உட்பட அனைவரும் வீட்டுக்கு சென்றனர். இதனையடுத்து, அப்பகுதி இரவுநேர செக்யூரிட்டி பணிக்கு வந்து, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அண்ணாநகர் பிரதான சாலையில், 2 சொகுசு கார்கள் ரேசில் பங்கேற்பதைபோல், அசுர வேகத்தில் சென்றன. அப்போது, திடீரென ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. பின்னர் அதே வேகத்தில், மூடியிருந்த சூப்பர் மார்க்கெட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து நின்றது. இதில், செக்யூரிட்டிக்கு படுகாயம் ஏற்பட்டது.  இதையடுத்து, காரை ஓட்டி வந்த  2 வாலிபர்கள் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றனர். தகவலறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த செக்யூரிட்டியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், படுகாயம் அடைந்த செக்யூரிட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஓசிம் (30) என்பதும், விபத்தில் சிக்கிய கார் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் (50) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவரது மகன் ராஜேஷ் (21) அவருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்று, தனது நண்பர்களுடன் கார் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.புகாரின்பேரில், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதில் இருந்த ராஜேஷின் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை