அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஒரு வாரமாக ‘லால் சலாம்’ படப்பிடிப்பு

திருவண்ணாமலை, ஜூலை 2: திருவண்ணாமலையில் நடைபெறும் லால்சலாம் படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகை நிரோஷா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். லால்சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏற்கனவே நடந்து முடிந்தது. அதில், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் நடக்கிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதையொட்டி, கடந்த 25ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்த ரஜினிகாந்த், தனியார் கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். மேலும், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும், லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு நேற்றுடன் திருவண்ணாமலையில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, செஞ்சி மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதையொட்டி, காலை 7 மணியளவில் கோயிலுக்கு காரில் வந்த ரஜினிகாந்த், அம்மணி அம்மன் கோபுரம், கிளிகோபுரம் வழியாக அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்றார். சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் மெய்மறந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். சுமார் 20 நிமிடங்கள் கோயிலில் இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்திருக்கும் தகவல் பரவியதும், அவரது ரசிகர்கள் கோயிலுக்குள் திரண்டனர். அவருடன் ‘செல்பி’ எடுக்க ஆர்வம் காட்டினர். அதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, நடிகர் ரஜினிகாந்துடன் வந்திருந்தவர்கள், அவரை பாதுகாப்புடன் கோயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர், அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் நிறுத்தியிருந்த காரில் ஏறி அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மீது தீவிர பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் மின்னொளி வசதியை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, சனி பிரதோஷமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்து சுவாமி தரிசனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை